ஈரோடு நவ 17:

ஈரோடு மார்க்கெட்களில் மஞ்சள் வரத்து குறைந்து காணப்பட்டது. புவிசார் குறியீடு பெற்ற ஈரோடு மஞ்சளுக்கு தமிழ்நாடு மட்டுமின்றி நாடு முழுவதும் தனி மவுசு உண்டு. வெளிநாடுகளுக்கும் ஈரோடு மஞ்சள் ஏற்றுமதி செய்யப்படுகிறது. உரிய விலை கிடைக்காததால் மஞ்சள் விவசாயிகள் கடந்த சில ஆண்டுகளாக பெரும் சிரமப்பட்டு வருகிறார்கள். விலை கிடைக்கும் என்ற எதிர்பார்ப்புடன் விவசாயிகள் தங்களது மஞ்சளை இருப்பு வைத்து பராமரித்து வருகிறார்கள்.

ஈரோடு மாவட்டத்தை பொறுத்தவரை 4 இடங்களில் மஞ்சள் ஏலம் நடத்தப்படுகிறது. பெருந்துறை அருகே கருமாண்டிசெல்லிபாளையம், செம்மாம்பாளையம் ஆகிய இடங்களில் ஒழுங்குமுறை விற்பனை கூடம் மூலமாகவும், ஈரோடு மற்றும் கோபி வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கங்கள் மூலமாகவும் மஞ்சள் ஏலம் நடக்கிறது.

கடந்த சில மாதங்களாக மஞ்சள் விலை உயராமல் குவிண்டாலுக்கு சுமார் ரூ.7 ஆயிரத்துக்கு விற்பனையாகி வருகிறது. இதனால் விவசாயிகள் மஞ்சளை விற்பனைக்காக கொண்டு செல்ல தயக்கம் காட்டி வருகிறார்கள். அவர்கள் விலை உயர்வு ஏற்படும் என்ற எதிர்பார்ப்புடன் காத்திருக்கிறார்கள். இதுகுறித்து ஈரோடு மஞ்சள் வணிகர்கள் மற்றும் கிடங்கு உரிமையாளர்கள் சங்க செயலாளர் சத்தியமூர்த்தி கூறியதாவது.

தீபாவளி பண்டிகைக்கு பிறகு மஞ்சளின் விலை உயரும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் எதிர்பார்த்த வகையில் விலை உயரவில்லை. இதனால் விவசாயிகள் குறைந்த அளவு மஞ்சளை விற்பனைக்காக கொண்டு வருகின்றனர். கடந்த ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் மஞ்சளின் விலை அதிகரித்தது. அந்த சமயம் ஒரு குவிண்டால் ரூ.10 ஆயிரம் வரை விற்பனையானது. அப்போது விவசாயிகள் பலர் தங்களது இருப்பு மஞ்சளை விற்பனைக்காக கொண்டு வந்தார்கள்.

வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி அதிகமாக இருந்ததால் இந்த விலை உயர்வு ஏற்பட்டது. எனவே விலை மேலும் உயரலாம் என்றும் எதிர்பார்க்கப்பட்டபோது மீண்டும் விலை சரிய தொடங்கியது. கடந்த மாதமும் ஏற்றுமதி ஓரளவுக்கு இருந்து வந்தது. ஆனால் தற்போது குறைந்து விட்டது. இந்தியாவிலேயே மராட்டிய மாநிலம் மராத்துவாடா மற்றும் தெலுங்கானா மாநிலம் நிஜாமாபாத் ஆகிய இடங்களில் 60 சதவீதம் மஞ்சள் விளைவிக்கப்படுகிறது.

இந்த மஞ்சள் டிசம்பர் மாதம் 15-ம் தேதிக்கு பிறகு அறுவடை செய்யப்பட்டு மார்க்கெட்டுக்கு கொண்டு வரப்படுகிறது. அந்த பகுதிகளில் இந்த ஆண்டு அதிக கனமழை பெய்துள்ளது. எனவே அங்கிருந்து புது மஞ்சள் வரத்து குறைவாக இருக்க வாய்ப்பு உள்ளது. அதேசமயம் பவானி, அந்தியூர் உள்ளிட்ட இடங்களில் ஜனவரி மாதத்திலும், காலிங்கராயன் பாசன பகுதியில் பிப்ரவரி மாதத்திலும் அறுவடை பணிகள் தொடங்கிவிடும்.

அதன்பிறகு இந்த பகுதிகளில் இருந்தும் புது மஞ்சள் வரத்து ஏற்படும்.கடந்த நிதி ஆண்டு முடிவின்போது மஞ்சளின் ஏற்றுமதி அதிகமாக இருந்ததால் விலை உயர்ந்தது. அதுபோல் இந்த ஆண்டும் இருக்கலாம் என்று நம்பப்படுகிறது. எனவே இனிவரும் நாட்களில் மஞ்சளின் விலை உயர வாய்ப்பு இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அந்த எதிர்பார்ப்பில் விவசாயிகள் உள்ளனர். அதேபோல் விலை உயர்வு ஏற்பட்டால் வர்த்தகம் சிறப்பாக இருக்கும் என்ற எதிர்பார்ப்புடன் மஞ்சள் வியாபாரிகளும் காத்திருக்கிறார்கள்.

கடந்த 10 ஆண்டுகளாக உரிய விலை கிடைக்காததால் விவசாயிகள் குடோன்களில் மஞ்சளை இருப்பு வைத்து உள்ளார்கள். இந்த மஞ்சளை பராமரிப்பதற்காக குறிப்பிட்ட செலவு செய்யப்பட வேண்டியுள்ளது. ஆனால் நீண்ட நாட்களாக இருப்பு வைக்கப்பட்டு உள்ளதால், விலையும் குறைந்து விற்பனையாகிறது. இதனால் மஞ்சள் இருப்பு வைத்துள்ள விவசாயிகளுக்கு மேலும் நஷ்டம் ஏற்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார். https://www.tnagrisnet.tn.gov.in

நிருபர் ஈரோடு டுடே
https://www.erode.today/