ஈரோடு சூலை 12:

ஈரோடு கலெக்டர் அலுவலக வளாகத்தில் உலக மக்கள் தொகை தின விழிப்புணர்வு உறுதி மொழியேற்பு மற்றும் பரிசளிப்பு விழா நிகழ்ச்சி நடந்தது. கலெக்டர் எச்.கிருஷ்ணனுண்ணி தலைமை வகித்து, பலுான்களை பறக்கவிட்டு, விழிப்புணர்வு வாகனத்தை துவக்கி வைத்தார். பின்னர் அனைத்து துறை அலுவலர்கள், செவிலியர்கள் சேர்ந்து உலக மக்கள் தொகை தின விழிப்புணர்வு உறுதி மொழியேற்றனர். கலெக்டர் கிருஷ்ணனுண்ணி பேசியது: மக்கள் தொகையின் முக்கியத்துவத்தை விழிப்புணர்வுடன் அறிய வேண்டும். மக்கள் தொகையை கட்டுப்படுத்தும் வழிமுறைகள், குடும்ப நல முறைகளை பின்பற்ற வேண்டும். கடந்த 2011ம் ஆண்டு இந்திய மக்கள் தொகை 121 கோடியாக இருந்தது. தமிழகத்தின் மக்கள் தொகை 7.21 கோடி, ஈரோடு மாவட்ட மக்கள் தொகை 22.50 லட்சம் என இருந்தது. ஆனால் தற்போது இந்திய மக்கள் தொகை 139 கோடியாகவும், உலக மக்கள் தொகையில் 7 பேரில் ஒருவர் இந்தியராகவும் உள்ளனர். ஈரோடு மாவட்டத்தில் ஆயிரம் பேரில் 13.1 வீதம் என்ற விகிதத்தில் பிறப்பும், 6.3 வீதத்தில் இறப்பும் நிகழ்கிறது. எனவே மக்கள் தொகை கட்டுப்படுத்த விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும். அரசு தெரிவிக்கும் கருத்துக்களை உணர்ந்து செயல்பட வேண்டும், இவ்வாறு பேசினார். பல்வேறு போட்டிகளில் வென்ற குழந்தைகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. உதவி கலெக்டர் ஏகம்.ஜெ.சிங், மருத்துவ பணி இணை இயக்குனர் கோமதி, துணை இயக்குனர்கள் ராஜசேகர், ரமாமணி, சவுண்டம்மாள் உட்பட பலர் பங்கேற்றனர்.

செய்தி நிருபர் ஈரோடு டுடே

https://www:erode.today