ஈரோடு ஆக 10:

ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் சார்பில் ஈரோட்டில் நடந்த உலக தாய்ப்பால் வாரவிழாவில் கர்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து தொகுப்பினை கலெக்டர் கிருஷ்ணனுண்ணி வழங்கினார். உலக தாய்ப்பால் வார விழா ஆண்டு தோறும் ஆகஸ்டு மாதம் முதல் வாரம் கொண்டாடப்படுகிறது. அதன்படி கடந்த 1ம் தேதி முதல் ஈரோடு மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப்பணிகள் துறை சார்பில் உலக தாய்ப்பால் வாரம் கொண்டாடப்பட்டது. நேற்று தாய்ப்பால் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் ஈரோடு கலெக்டர் அலுவலக வளாகத்தில் நடந்தது. நிகழ்ச்சிக்கு கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தலைமை தாங்கினார்.

நிகழ்ச்சியில் தாய்ப்பாலின் அவசியம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் விழிப்புணர்வு வாகனத்தை கலெக்டர் கொடி அசைத்து தொடங்கி வைத்தார். தொடர்ந்து கர்ப்பிணிகளுக்கு இரும்புச்சத்து, புரதம், விட்டமின்–சி அதிகம் உள்ள ஊட்டச்சத்து அடங்கிய தொகுப்புகளை கலெக்டர் கிருஷ்ணனுண்ணி வழங்கினார். பொதுமக்களுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப்பணிகள் திட்ட அதிகாரி எஸ்.சண்முகவடிவு உள்பட பலர் கலந்து கொண்டனர்.

ஈரோடு மாவட்டத்தில் உலக தாய்ப்பால் வாரவிழாவையொட்டி மாவட்ட அளவிலும் வட்டார அளவிலும் குழந்தை வளர்ச்சித்திட்ட அலுவலகங்களின் கீழ் செயல்படும் அங்கன்வாடி மையங்களில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. நேரடியாக மட்டுமின்றி வாட்ஸ்அப் மூலமும் கர்ப்பிணிகள் மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கு தாய்ப்பாலின் நன்மைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது

செய்தி நிருபர் ஈரோடு டுடே
https://erode.today