கோபி சூலை 4: கோபி அருகில் உள்ள மொடச்சூர் ஊராட்சியில் திட்டப்பணிகள் தொடக்க விழா நடைபெற்றது. மாவட்ட வருவாய் அதிகாரி முருகேசன் தலைமை தாங்கினார். கோபி ஆர்.டி.ஓ, பழனிதேவி முன்னிலை வகித்தார். ஊராட்சி மன்ற தலைவர் சரவணகுமார் வரவேற்றார்.

வீட்டு வசதித்துறை அமைச்சர் சு.முத்துசாமி கலந்து கொண்டு, ஊராட்சி மன்ற அலுவலகத்தின் சுற்றுச்சுவர் கட்டுதல், 5 இடங்களில் வடிகால் அமைத்தல் என ரூ.30 லட்சத்து 47 ஆயிரம் மதிப்பிலான திட்டப்பணிகளை பூமிபூஜை செய்து தொடங்கி வைத்தார். ஊராட்சி மன்ற தலைவர் சரவணகுமார் அவருடைய சொந்தநிதியில் இருந்து கொரோனோ நிவாரணத்திற்காக முதல்அமைச்சரின் நிவாரண நிதிக்காக ரூ.10 ஆயிரத்திற்கான காசோலையை அமைச்சரிடம் வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியின் போது, அங்கிருந்த தூய்மை பணியாளர்கள், தங்களது ஊதியத்தை உயர்த்தி வழங்க வேண்டும் என்று அமைச்சரிடம் கோரிக்கை மனு வழங்கினார்கள். மனுவை ஏற்றுக் கொண்ட அமைச்சர், மாவட்ட நிர்வாகத்திடம் தெரிவித்து தீர்வு பெறுவதாக தெரிவித்தார். பின், அ.தி.மு.க.வில் இருந்து விலகிய 50க்கும் மேற்பட்டவர்கள் அமைச்சர் சு.முத்துசாமி முன்னிலையில் தி.மு.க.வில் இணைந்தனர்.

நிகழ்ச்சியில் மாநில விவசாய அணி இணைச் செயலாளர் கள்ளிப்பட்டி மணி, ஈரோடு வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் என்.நல்லசிவம், தெற்கு ஒன்றிய செயலாளர் முருகன், குமணன், சிந்துரவிச்சந்திரன், ஊராட்சி வார்டு உறுப்பினர்கள், தி.மு.க.வினர் கலந்து கொண்டனர்.

செய்தி நிருபர் ஈரோடு டுடே