ஈரோடு செப் 3: ஈரோடு மாவட்டத்தில் நேற்று மாலை முதல் பரவலாக மழை பெய்து வருகின்றது. அதிகபட்சமாக குண்டேரிப்பள்ளம் அணைப்பகுதியில் 35 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது. வளி மண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் மழை பெய்து வருகின்றது. ஈரோடு மாவட்டத்தில் நேற்று மாலை முதல் பரவலாக நல்ல மழை பெய்து வருகின்றது. மாலையில் சாரல் மழையாக பெய்யத்தொடங்கி பின்னர் இரவில் பல்வேறு பகுதிகளில் பலத்த மழை பெய்தது. இன்று காலையிலும் பரவலாக மழை பெய்தது. மழையின் காரணமாக ஆங்காங்கே ஓடைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடுகின்றது. மார்க்கெட் உட்பட பல இடங்களில் மழை நீர் சாக்கடை நீர் போல தேங்கி காணப்படுகிறது. இன்று காலை 8 மணி நிலவரப்படி மாவட்டத்தில் பெய்த மழையளவு விபரம், ஈரோடு 11 மில்லி மீட்டர், பெருந்துறை, தாளவாடி தலா 9, கோபி 9.3,  சத்தி, நம்பியூர் தலா 7, பவானி 24, கொடுமுடி 33, சென்னிமலை 21, மொடக்குறிச்சி 30, கவுந்தப்பாடி 15, எலந்தைகுட்டை மேடு 5.2, அம்மாபேட்டை 14.4, கொடிவேரி 9.1, குண்டேரிப்பள்ளம் 35, வரட்டுப்பள்ளம் 14.4, மாவட்டத்தின் சராசரி மழையளவு 15.4 மில்லி மீட்டர் ஆகும்.இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 102 அடியாகவும், அணைக்கான வரத்து 3,928 கனஅடியாகவும், காலிங்கராயன் வாய்க்காலில் பாசனத்திற்காக 500 கனஅடியும், பவானி ஆற்றில் 3,390 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகின்றது. இதே போல மேட்டூர் அணையின் நீர்மட்டம் 68.550 அடியாகவும், வரத்து 13670 கனஅடியாகவும், பாசனத்திற்காக காவிரியில் 14000 கனஅடி மற்றும் கால்வாய் பாசனத்திற்கு 650 கனஅடி தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

செய்தி நிருபர் ஈரோடு டுடே
https://www.erode.today/