ஈரோடு நவ 18:

ஈரோட்டில் கூட்டுறவு வார விழாவில் 1,554 பயனாளிகளுக்கு ரூ.21.53 கோடி மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை அமைச்சர் சு.முத்துசாமி வழங்கினார். ஈரோட்டில் ‘கூட்டுறவு அமைப்புகளுக்கான அலுவல் நடவடிக்கைகளை எளிமைபடுத்துதல்’ என்ற தலைப்பில் மாவட்ட அளவிலான 68வது அனைத்திந்திய கூட்டுறவு வாரவிழா நேற்று நடந்தது.

விழாவுக்கு ஈரோடு கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தலைமை தாங்கினார். அந்தியூர் எம்.எல்.ஏ., வெங்கடாச்சலம் முன்னிலை வகித்தார். வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சிதுறை அமைச்சர் சு.முத்துசாமி கலந்து கொண்டு, 1,554 பயனாளிகளுக்கு ரூ.21 கோடியே 53 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசினார்.

அப்போது, அவர் கூறியதாவது: தமிழக முதல்வர் விவசாயிகளின் மேம்பாட்டிற்காக எண்ணற்ற திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார். தேர்தல் காலத்தில் அறிவித்த அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றும் வகையில் சிறப்பான முறையில் செயல்பட்டு வருகிறார். ஈரோடு மாவட்டத்தில் ஏறத்தாழ 85 மேம்பாட்டு பணிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் மேற்கொள்ள படவுள்ளது.இன்னும் பல நூறு திட்டங்கள் கைவசம் உள்ளது.

நம்முடைய மாவட்டத்தில் மக்களின் அடிப்படை பிரச்சினைகள் அனைத்தும் பூர்த்தி செய்து கொடுப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும். ஒவ்வொரு பகுதியிலும், அதற்கான திட்டம் வகுத்து செயல்படுத்தப்பட உள்ளது. நாட்டின் வளர்ச்சிக்கு மூன்று திட்டங்கள் அடிப்படையாக கொண்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது.

முதல்வரால் அறிவிக்கப்படும் பெரிய திட்டங்கள் நாட்டின் வளர்ச்சிக்கும், நடுத்தர திட்டங்கள் மாவட்டத்தின் வளர்ச்சிக்கும், சிறிய திட்டங்கள் பொதுமக்கள் அன்றாட சந்திக்கும் அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் விதமாகவும் செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் தற்போதைய கனமழை காரணமாக ஏற்பட்ட பயிர் சேதங்களை கணக்கிடும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

கூட்டுறவுத்துறையின் சார்பில் ஈரோடு மண்டலத்தில் வேளாண் உற்பத்தியை அதிகரிக்க தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலம் விவசாயிகளுக்கு ரூ.1.60 லட்சம் வரை நபர் ஜாமீன் பேரில் வட்டியில்லா பயிர் கடன்கள் வழங்கப்பட்டு வருகிறது. 2021–-2022ம் ஆண்டில் இதுவரை 22,424 விவசாயிகளுக்கு ரூ.224.50 கோடி பயிர் கடன் வழங்கப்பட்டுள்ளது.

மேலும், விவசாயிகள் பெற்ற பயிர் கடனை தவணை தவறாது திருப்பி செலுத்துவதற்கு 7 சதவீத வட்டி தொகையினை முழுவதும் அரசாங்கம் ஏற்று, வட்டியில்லா விவசாய பயிர் கடன் வழங்கப்பட்டு வருகிறது. விவசாயிகளுக்கு ஆதாரத்தின் அடிப்படையில் ரூ.3 லட்சம் வரை பயிர்க்கடன் வழங்கப்பட்டு வருகிறது.விவசாயிகளுக்கு நகையீட்டின் பேரில் வட்டியில்லா விவசாய பயிர்க்கடன் வழங்கப்பட்டு வருகிறது.

தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் நகையீட்டின் பேரில் உறுப்பினர் ஒருவருக்கு அதிகபட்சமாக ரூ.20 லட்சம் வரை நகை கடன் வழங்கப்பட்டு வருகிறது. விவசாயிகளின் துயர் துடைக்கும் திட்டமான பயிர்க்கடன் தள்ளுபடி திட்டத்தின் கீழ் நடப்பாண்டில் ஈரோடு மண்டலத்தில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலம் வழங்கப்பட்டு 31.01.2021 வரை நிலுவையிலிருந்த பயிர்க்கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

விவசாய வேலையாட்கள் பற்றாக் குறையினை களைய 36 தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் ரூ.1.12 கோடி அரசு மானியத்தில் ரூ.2.85 கோடி மதிப்பில் உழவு இயந்திரம், கதிரடிக்கும் இயந்திரம், மினி டிராக்டர், பயிர் நடவு செய்யும் இயந்திரம் போன்ற வேளாண் கருவிகளுடன் வேளாண் சேவை மையங்கள் அமைக்கப்பட்டு, விவசாயிகளுக்கு மிக குறைந்த வாடகையில் வழங்கப்படுகிறது.

வேளாண் சார்ந்த முதலீட்டு கடன்களாக 2021-–2022ம்  ஆண்டில் இதுவரை 511 விவசாயிகளுக்கு ரூ.4.05 கோடியும், ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியின 198 விவசாயிகளுக்கு ரூ.1.42 கோடி பயிர்க்கடன் வழங்கப்பட்டுள்ளது. இதுவரை 2,354 புதிய உறுப்பினர்களுக்கு ரூ.21.08 கோடி பயிர்க்கடன் வழங்கப்பட்டுள்ளது.

தமிழக முதல்வர் உத்தரவின்படி, கொரோனா பெருந்தொற்று காரணமாக வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண தொகை மற்றும் 14 வகையான மளிகை பொருட்கள் 7.14 லட்சம் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு நியாய விலை கடைகள் மூலம் வழங்கப்பட்டுள்ளது.இவ்வாறு அமைச்சர் முத்துசாமி பேசினார்.

மாவட்டத்தில் சிறப்பாக செயல்பட்ட 38 கூட்டுறவு சங்கங்களுக்கு கேடயமும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டது. முன்னதாக 68வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழாவினையொட்டி கூட்டுறவு கொடியினை ஏற்றி வைத்து, அங்கு கூட்டுறவு துறையின் சார்பில் அமைக்கப்பட்டிருந்த கண்காட்சியினையும் பார்வையிட்டார்.

மாவட்ட ஊராட்சி தலைவர் நவமணி கந்தசாமி, ஈரோடு ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் பிரகாஷ், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் கிருஷ்ணராஜ், மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றிய தலைவர் காளியப்பன், ஆவின் பொதுசூமலாளர் பாலசுப்பிரமணியம், மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டக சாலைதலைவர் ஜெகதீசன், மாவட்ட கூட்டுறவு அச்சுக்கூட தலைவர் ரமேஷ்,

நெசவாளர் கூட்டுறவு சங்கங்களின் சம்மேளன தலைவர் சந்திரசேகரன், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் ரேணுகா, கூடுதல் பதிவாளரும், மேலாண்மை இயக்குநருமான செந்தமிழ்ச்செல்வி, துணைப்பதிவாளர் ராமநாதன், மேலாண்மை இயக்குநர்(பொ) பாலாஜி, கூட்டுறவு சங்கங்களின் துணைப்பதிவாளர் கந்தராஜா, கூட்டுறவு சங்கங்களின் துணைப்பதிவாளர் நர்மதா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். https://www.jkhudd.gov.in

நிருபர் ஈரோடு டுடே
https://www.erode.today/