ஈரோடு ஆக 12:

தடை செய்யப்பட்ட பாக்கு,-புகையிலை பொருட்களை விற்க மாட்டோம் என்று ஈரோட்டில் வணிகர் சங்கத்தினர் உறுதி மொழி ஏற்றுக் கொண்டனர். ஈரோடு மாவட்ட உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத்துறை நியமன அதிகாரி டாக்டர் தங்கவிக்னேஷ் தலைமையில், ஈரோடு மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட பாக்கு மற்றும் புகையிலை பொருட்கள் விற்பனை தடுக்கும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

சமீப காலமாக ஈரோட்டில் போலீசார் நடத்திய சோதனையில் தடை செய்யப்பட்ட புகையிலை அதிக அளவில் கைப்பற்றப்பட்டு உள்ளன. கடைகளில் சில்லரை விற்பனைக்காக வியாபாரிகள் கொண்டு சென்றபோது போலீசாரின் சோதனையில் அவை சிக்கின. எனவே சில்லரை வியாபாரிகள் தடை செய்யப்பட்ட புகையிலை மற்றும் குட்கா உள்ளிட்ட பாக்குகளை விற்பனை செய்வதை தடுக்க விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

அதன்படி ஈரோடு மாவட்ட தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்புடன் இணைந்து உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத்துறை மூலம் விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று ஈரோட்டில் நடந்தது. நிகழ்ச்சிக்கு மாவட்ட செயலாளர் ஆர்.கே.சண்முகவேல் தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில் மாவட்ட உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத்துறை நியமன அதிகாரி டாக்டர் தங்கவிக்னேஷ் கலந்து கொண்டு தடை செய்யப்பட்ட பொருட்களை விற்பதால் ஏற்படும் பிரச்சினைகள் குறித்து பேசினார்.

வீரப்பன்சத்திரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தமிழ்ச்செல்வி காவல் துறை நடவடிக்கைகள் குறித்து பேசினார். டவுன் துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலக சப்-இன்ஸ்பெக்டர் நரசிம்மன் உள்பட பலர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியின் போது, தடை செய்யப்பட்ட பாக்கு-புகையிலை பொருட்களை விற்பனை செய்ய மாட்டோம் என்று கூறி வணிகர் சங்கத்தினர் உறுதி மொழி ஏற்றுக்கொண்டனர். நிகழ்ச்சியில் விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வெளியிடப்பட்டது.முன்னதாக தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாவட்ட துணைத்தலைவர் பொ.ராமச்சந்திரன் வரவேற்றார். முடிவில் இளைஞர் அணி மாவட்ட செயலாளர் அ.லாரன்ஸ் ரமேஷ் நன்றி கூறினார்

செய்தி நிருபர் ஈரோடு டுடே
https://erode.today