ஈரோடு டிச 9:

ஈரோடு மாவட்டத்தின் முக்கிய நீர் ஆதாரமாக விளங்கும் பவானிசாகர் அணை மூலம் ஈரோடு, திருப்பூர், மற்றும் கரூர் மாவட்டங்களில் உள்ள 2 லட்சத்து 47 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. அணையின் முக்கிய நீர்பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப் பகுதி உள்ளது. கடந்த சில நாட்களாக நீலகிரி மலைப்பகுதிகளில் பரவலாக மழை பெய்து வந்ததால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வந்தது.

இதனால் அணையின் நீர்மட்டம் உயர்ந்து வந்தது. நேற்று முன்தினம் மீண்டும் நீர்ப்பிடிப்பு பகுதியில் பரவலாக மழை பெய்ததால்  பவானிசாகர் அணைக்கு 6 ஆயிரம் கனஅடி வீதம் நீர்வரத்தானது. இந்நிலையில் நேற்று மழைப்பொழிவு இல்லாததால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து குறைந்தது. இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணை 104.51 படியாக உள்ளது.

அணைக்கு வினாடிக்கு 2119 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்கால் பாசனத்திற்காக 1, 500 கன அடியும், பவானி ஆற்றுக்கு 100 கன அடி  வெளியேற்றப்பட்டு வருகிறது. இதுவரை நிறுத்தப்பட்டிருந்த தடப்பள்ளி அரக்கன்கோட்டை பாசனத்திற்காக இன்று முதல் 500 கனஅடி தண்ணீர் மீண்டும் திறந்து விடப்பட்டு வருகிறது. மொத்தம் 2 ஆயிரத்து 100 கன அடி வீதம் தண்ணீர் அணையில் இருந்து வெளியேற்றப்பட்டு வருகிறது. https://www.erode.nic.in 

நிருபர் ஈரோடு டுடே
https://www.erode.today/