ஈரோடு சூலை 13 :

ஈரோட்டில் கொரோனா தொற்றில் இருந்து மக்களை பாதுகாக்க தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு, தடுப்பூசி போடும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது. இம்மாவட்டத்தில் இது வரை 4 லட்சத்து 62 ஆயிரம் பேர் தடுப்பூசி போட்டுள்ளனர். தடுப்பூசி போட பொதுமக்கள் அதிகமாக ஆர்வம் காட்டி வருகின்றனர். தடுப்பூசி போடும் முகாம்களில் இரவு முதலே குவிய தொடங்கி விடுகின்றனர். மக்கள் கூட்டத்தை தவிர்க்க சுழற்சி முறையில் தடுப்பூசி போடும் பணி கடந்த மாதம் 24ம் தேதி முதல் நடந்து வருகிறது.

அதன்படி ஈரோட்டில் மாநகராட்சியில் உள்ள 60 வார்டுகளில் தினசரி சுழற்சி முறையில் தலா 20 வார்டுகளில் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இதேபோல் புறநகர்ப் பகுதிகளிலும் தடுப்பூசி போடப்படும் முகாம்கள் அதிகரிக்கப்பட்டிருந்தது. தடுப்பூசி கையிருப்பு இல்லாததால் கடந்த 4ம் தேதி முதல் ஈரோடு மாவட்டம் முழுவதும் தடுப்பூசி போடும் பணிகள் நிறுத்தப்பட்டது. கடந்த 7, 8ம் தேதிகளில் கோவிஷில்டு தடுப்பூசி இரண்டாம் டோஸ் மட்டும் பொதுமக்களுக்கு போடப்பட்டது. அதேநேரத்தில் 8 நாட்களாகியும் கொரோனா தடுப்பூசி முதல் டோஸ் பொதுமக்களுக்கு செலுத்தப்படவில்லை. ஈரோடு மாவட்டத்திற்கு கொரோனா தடுப்பூசி வந்தது. தடுப்பூசிகள் அனைத்தும் பிரித்து அந்தந்த ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து நேற்று ஈரோடு மாவட்டத்தில் உள்ள 111 இடங்களில் பொதுமக்களுக்கு கோவிஷில்டு தடுப்பூசி செலுத்த எடுக்கப்பட்டது.

இதுகுறித்து தகவல் கிடைத்ததும் வழக்கம்போல் இரவிலேயே தடுப்பூசி போடும் முகாம்களில் மக்கள் குவியத் தொடங்கிவிட்டனர். ஈரோடு மாநகர் பகுதியில் இன்று 20 இடங்களில் தடுப்பூசி போடப்பட்டது. இதற்காக சிலர் தடுப்பூசி மையங்களில் நேற்றுஇரவிலேயே குவிய தொடங்கி விட்டனர். ஈரோடு இடையன்காட்டுவலசு தடுப்பூசி மையத்தில் கற்கள், காலணிகள், துடைப்பம் ஆகியவற்றை வைத்து இடம் பிடித்தனர். வழக்கம்போல் டோக்கன் அடிப்படையில் பொதுமக்களுக்கு தடுப்பூசி போடப்பட்டது. ஒரு சில இடங்களில் 150 பேருக்கும், ஒரு சில இடங்களில் 170 பேருக்கும், ஈரோடு மாநகர் பகுதியில் 180 பேருக்கும் டோக்கன் அடிப்படையில் தடுப்பூசி செலுத்தப்பட்டது.

ஆனால் அதே நேரம் கோவேக்சின் தடுப்பூசி கையிருப்பு இல்லாததால் இன்னும் அந்த தடுப்பூசி போடபடவில்லை. சிவகிரி பகுதியில் நேற்று முதல் கர்ப்பிணி பெண்களுக்கு தடுப்பூசி முகாம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடைபெற்றது. முதற்கட்டமாக 50 கர்ப்பிணி பெண்கள் கலந்து கொண்டு தடுப்பூசி செலுத்துகின்றனர். வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் மேகநாதன் முகாமை தொடங்கி வைத்தார்.

செய்தி நிருபர் ஈரோடு டுடே

https://www:erode.today