ஈரோடு ஆக 24:

சிறு, குறு தானிய வகைகளின் உற்பத்தியை பெருக்க தமிழ்நாடு அரசு அறிவித்துள்ள ‘சிறு தானிய இயக்க பட்டியலில்’ ஈரோடு மாவட்டத்தை சேர்க்க வேண்டும் என்று திருப்பூர் எம்.பி., வலியுறுத்தி உள்ளார். தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு, திருப்பூர் நாடாளுமன்ற உறுப்பினர் சுப்பராயன் அனுப்பி உள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது,ஈரோடு மாவட்டத்தில் தாளவாடி, கடம்பூர், பர்கூர் ஆகிய மலை பகுதிகள் முழுவதும் மானாவாரி நிலப்பகுதிகளாகும்.

இம்மலை மக்களின் வாழ்வாதாரம் விவசாயம் தான். மலை மக்களின் பிராதான விளை பொருளாக ராகி, தினை, சாமை, குதிரைவாலி போன்ற சிறு தானிய வகைகளும் எள், அவரை, துவரை போன்ற வகைகளும் உள்ளன. மலைப்பகுதி மக்கள் காலம் காலமாக பயிரிட்டு வரும் சிறு தானிய வகைகளுக்கு நியாய விலை கிடைக்காததால் மாற்றுப்பயிர்களுக்கு மாறி, தங்கள்  உணவாதாரத்தை இழந்து வருகிறார்கள்.

மலை மக்களின், குறிப்பாக ஏழைகளின் உணவாக இருந்த ராகி, இன்று வசதி படைத்தவர்களும் தேடி விரும்பி உண்ணும் உணவாக மாறியுள்ளது. மலைப்பகுதியில் விளைவிக்கப்படும் சிறு தானியங்கள் எந்தவித ரசாயண உரங்களும், பூச்சிக்கொல்லி மருந்துகளும் பயன்படுத்தப்படாமல் விளை விக்கப்படுபவை. இந்நிலையில் தமிழ்நாடு சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட வேளாண்நிதி நிலை அறிக்கையில், சிறு, குறு தானிய வகைகளின் உற்பத்தியை பெருக்கவும், சந்தைப்படுத்தவும், விளைவிப்போருக்கு நியாயவிலை கிடைக்கவும் ‘சிறு தானிய இயக்கத்தை ‘ அறிவித்திருப்பதை வரவேற்கிறேன்.

ஆனால் இவ்வியக்கம் 18 மாவட்டங்களில் செயல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் ஈரோடு மாவட்டம் சேர்க்கப்படாமல் விடுபட்டுள்ளது. எனவே பழங்குடியினத்தவரின் நலனை காக்கும் அடிப்படையில் சிறு தானிய இயக்கத்தில் ஈரோடு மாவட்டத்தை சேர்க்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

செய்தி நிருபர் ஈரோடு டுடே
https://erode.today