ஈரோடு ஆக 20:
தமிழகத்தில் அரசு மருத்துவமனைகளில் அவுட்சோர்சிங் முறையில் பணியாளர்கள் நியமிக்கப்படுவதை கைவிட வலியுறுத்தி ஈரோட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஈரோடு அரசு தலைமை மருத்துவமனையில் பணியாற்றும் அவுட்சோர்சிங் பணியாளர்களின் பேரவை கூட்டம் நேற்று ஈரோடு ஏ.ஐ.டி.யு.சி., அலுவலகத்தில் நடந்தது.
மாவட்ட மருத்துவத்துறை பணியாளர்கள் சங்கத்தின் தலைவர் சின்னசாமி தலைமை தாங்கினார். ஈரோடு மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் ஹவுஸ் கீப்பிங், செக்யூரிட்டி, டேட்டா எண்ட்ரி, நர்சிங் அசிஸ்டெண்ட், எலக்ட்ரீசியன், பிளம்பர் உள்ளிட்ட பல்வேறு பணிகளில் சுமார் 150 பேர் அவுட்சோர்சிங் பணியாளர்களாகப் பணிபுரிந்து வருகின்றனர்.
இவர்களுக்கு கடந்த 4 ஆண்டுகளாக ஊதிய உயர்வு வழங்கப்படவில்லை. வார விடுமுறை, தேசிய பண்டிகை விடுமுறை, ஈட்டிய விடுப்புகள் கூட வழங்கப்படுவதில்லை. அவர்களுக்கு ஊதிய உயர்வு வழங்கி, சட்டப்படி வழங்க வேண்டிய வார விடுமுறை உள்ளிட்டவை உடனடியாக வழங்க வேண்டும். தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் அவுட்சோர்சிங் முறையில் பணியாளர்களை நியமிக்கப்படுவதை கைவிட வேண்டும்.
அவுட்சோர்சிங் பணியாளர்கள் அனைவரையும் அந்தந்த மருத்துவமனையில் நேரடிப் பணியாளர்களாக நியமிக்க வேண்டும். தகுதியான அனைவரையும் பணி நிரந்தரம் செய்து கால ஏற்றமுறை ஊதியம் வழங்க வேண்டும். அவுட் சோர்சிங் தொழிலாளர்களுக்கு வழங்காமல் வைத்துள்ள ஊதிய உயர்வு நிலுவைத் தொகைகளை கணக்கிட்டு வழங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கொரோனா கால பணிக்கு அரசு அறிவித்த ஊக்கத்தொகை ரூ.15ஆயிரத்தை உடனே வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் தீர்மானங்களாக நிறைவேற்றப்பட்டது. பின், ஈரோடு அரசு மருத்துவமனை கிளை நிர்வாகக்குழு உறுப்பினர்களாக முன்னாள் நகர மன்ற தலைவர் பிரபாகரன், ஏ.ஐ.டி.யு.சி., மாவட்ட துணைத் தலைவர் செல்வம் ஆகியோர் தலைமையில் 17 பேர் தேர்வு செய்யப்பட்டனர். இதில், சங்க நிர்வாகிகள் ஜெயபாரதி, மணியன், ரவி, வீரமுத்து உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
செய்தி நிருபர் ஈரோடு டுடே
https://erode.today