பெருந்துறை சூலை 21:
கூலி ஒப்பந்தம் காலாவதியாகிவிட்டதால் புதிய கூலி ஒப்பந்தம் அமல்படுத்த வேண்டும் என்று சுமை தூக்கும் தொழிலாளர்கள் வலியுறுத்தி உள்ளனர். ஈரோடு மாவட்ட ஏ.ஐ.டி.யு.சி., சுமை தூக்கும் தொழிலாளர்கள் சங்கத்தின் பெருந்துறை வட்டாரக்குழு கூட்டம் பெருந்துறையில் நேற்று சங்கத்தின் துணைத்தலைவர் மணியன் தலைமையில் நடைபெற்றது. சுமைதூக்கும் தொழிலாளர் சம்மேளன மாநில பொதுச்செயலாளர் சின்னசாமி, விசைத்தறி மற்றும் பொதுத் தொழிலாளர் சங்க செயலாளர் ஜெயபாரதி, பொருளாளர் குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள், பெருந்துறை தினசரி மார்க்கெட், பெருந்துறை நகர கடைகள், மற்றும் நிறுவனங்கள், பெருந்துறை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் நடைமுறையில் இருந்த சுமைதூக்கும் தொழிலாளர்களுக்கான கூலி ஒப்பந்தங்கள் காலாவதியாகிவிட்டதால் புதிய ஒப்பந்தம் அமல்படுத்த வேண்டும். தற்போது வழங்கப்படும் கூலியில் 50 சதவீத கூலி உயர்வு வழங்க வேண்டும். சுமை தூக்கும் தொழிலாளர்களுக்கு தனி நலவாரியம், சர்வதேச தொழிலாளர் அமைப்பின் பரிந்துரைப்படி தூக்கும் எடையளவு 55 கிலோவுக்கு மிகாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். 55 வயது நிறைவடைந்த சுமைதூக்கும் தொழிலாளர்களுக்கு மாதம் ரூ.3 ஆயிரம் ஓய்வூதியம் வழங்க வேண்டும். பணியிட விபத்தில் இறந்தால் ரூ.10 லட்சம் இழப்பீடு, சுமைதூக்கும் தொழிலாளர்கள் நிறைந்துள்ள இடங்களில் ஓய்வறைகள் கட்டிக்கொடுக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
செய்தி நிருபர் ஈரோடு டுடே
https://www:erode.today