ஈரோடு ஆக 21:

ஈரோடு மாவட்டத்தில் யூரியா தட்டுப்பாடு நிலவி வருவதால் சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர். ஈரோடு மாவட்டத்தில் தற்போது அனைத்து பாசனங்களுக்கும் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதையடுத்து உரங்கள், விதைகள் தேவை அதிகரிக்க தொடங்கி உள்ளது.

வேளாண்துறை சார்பில் தேவையான அளவு உரங்கள், விதைகள் ஆகியவை தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகள் மற்றும் தனியார் உரக்கடைகளில் இருப்பு வைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் யூரியா உரத்திற்கு மாவட்டம் முழுவதும் தட்டுப்பாடு நிலவி வருவதாகவும் இது தொடர்பாக வேளாண்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.

இது குறித்து கீழ்பவானி விவசாயிகள் நலச்சங்க தலைவர் நல்லசாமி கூறியதாவது,மாவட்டத்தில் அனைத்து பாசனங்களுக்கும் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் உரங்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக யூரியா உரத்தேவையானது அதிகரித்துள்ளது. இதனால் யூரியா உரம் தேவையான அளவு கிடைப்பதில்லை.

டெல்டா பாசன பகுதிகளுக்கு யூரியா அனுப்பி வைக்கப்பட்டுவிட்டதால் இந்த தட்டுப்பாடு நிலவுவதாக கூறப்படுகின்றது. எனவே வேளாண் அதிகாரிகள் உரிய கவனம் செலுத்தி தட்டுப்பாடின்றி யூரியா கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு நல்லசாமி கூறினார்.

செய்தி நிருபர் ஈரோடு டுடே
https://erode.today