ஈரோடு டிச 22:

ஈரோடு உட்பட பல மாவட்டங்களில் பொட்டாஷ் செயற்கை தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், பிற உரங்களை வாங்கினால் மட்டுமே பொட்டாஷ் வழங்க முடியும் என்ற கட்டாயத்தை உருவாக்கி உள்ளனர். இதுகுறித்து தமிழ்நாடு சிறு மற்றும் குறு விவசாயிகள் சங்க மாநில தலைவர் சுதந்திரராசு கூறியதாவது:-

ஈரோடு மாவட்டம் உட்பட தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் பொட்டாஷ் உரம் செயற்கையாக தட்டுப்பாடாக உள்ளன. மண்ணுக்கு கீழே விளையும் தன்மை கொண்ட மஞ்சள், மரவள்ளி, நிலக்கடலை உள்ளிட்ட அனைத்து வகை பயிருக்கும் பொட்டாஷ் உரம் அவசியம் தேவை. 50 கிலோ எடையுள்ள பொட்டாஷ் உரம் மூட்டை, 900 ரூபாயில் இருந்து, 1,700 ரூபாயாக திடீரென உயர்த்தப்பட்டது.

இதுபற்றி, எந்த அமைப்பும், அரசியல் கட்சிகள் கூட கேள்வி எழுப்பவில்லை. அந்தந்த பகுதியில் விவசாயிகள் மட்டும் குரல் கொடுக்கின்றனர். பெரும்பாலான உரக்கடைகளில் பொட்டாஷ் உரம் இருந்தாலும், ‘இல்லை’ எனக்கூறியும், பிற உரங்களை வாங்க வற்புறுத்துகின்றனர். அல்லது, கலப்பு உரங்களில் 17 முதல், 31 சதவீதம் வரை பொட்டாஷ் உள்ளதால், அதனை விவசாயிகளுக்கு வழங்குவதில்தான் அக்கரை காட்டுகின்றனர்.

எனவே தட்டுப்பாடு உள்ள உரங்களை, உரக்கடைகளில் விற்காமல் வேளாண் துறை நேரடியாகவும், அரசு நிறுவனங்கள் மூலம் மட்டுமே விற்க வேண்டும் என்ற நிலையை ஏற்படுத்த வேண்டும். ஏற்கனவே விளை பொருளுக்கு விலை இல்லாமல் தவிக்கும் விவசாயிகள், கூடுதல் செலவு செய்து உரம் வாங்கி வீட்டில் இருப்பு வைத்து நஷ்டத்தை சந்திக்கின்றனர். இவ்வாறு அவர் கூறினார். https://www.tnagrisnet.tn.gov.in

நிருபர் ஈரோடு டுடே
https://www.erode.today