ஈரோடு ஆக 1:

கோவையில் இருந்து தொழிற்சாலைகள் கழிவுகளை லாரிகளில் கொண்டு வந்து பெருந்துறை அருகே கொட்டப்பட்டு வருவதாக புகார் எழுந்துள்ளது. இது தொடர்பாக பெருந்துறை சிப்காட்டால் பாதிக்கப்பட்ட மக்கள் நலச் சங்கத்தின் சார்பில் வருவாய் வட்டாட்சியரிடம் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது, கோவை மாவட்டத்தில் செயல்படும் தொழிற்சாலைகளில் இருந்து வெளியேற்றப்படும் நச்சு கழிவுகளை டிப்பர் லாரிகளில் கொண்டு வந்து பெருந்துறை சிப்காட் அருகே உள்ள சேடங்காட்டூர் அருகில் உள்ள தனியார் நிறுவனத்தின் உரிமையாளருக்கு சொந்தமான நிலத்தில் கொட்டி வருகின்றார். இது தொடர்பாக மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் ஆய்வு செய்து எச்சரிக்கை விடுத்ததோடு நோட்டீஸ் விநியோகிக்கப்பட்டது. ஆனாலும் கழிவுகள் இரவு நேரங்களில் கொண்டு வந்து கொட்டுவது தொடர்கிறது. கடந்த 2 நாட்களுக்கு முன்பு கழிவுகளை ஏற்றி வந்த போது சேடங்காட்டூர் அருகே உள்ள வண்ணார் கருப்பண்ணசாமி கோயில் அருகே பொதுமக்கள் தடுத்து நிறுத்தினர். சட்ட விரோதமாக நச்சு கழிவுகளை கொண்டு வந்து இப்பகுதியில் கொட்டி நிலத்தடி நீரையும், நிலத்தையும் நஞ்சாக்கும் செயலில் ஈடுபடுபவர்கள் மீதும், கழிவுகளை அனுப்பிய தொழிற்சாலை உரிமையாளர் மீதும் கிரிமினல் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

செய்தி நிருபர் ஈரோடு டுடே
https://erode.today