ஈரோடு டிச 30:

கீழ்பவானி பாசன பகுதியில் நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்க விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர். ஈரோடு மாவட்டத்தில் காலிங்கராயன் பாசன பகுதிகளில் முதல்போக நெல் சாகுபடி முடிந்து கடந்த சில நாட்களாக அறுவடை பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றது.

இதையடுத்து பாசன பகுதிகளில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் சார்பில் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு விவசாயிகளிடமிருந்து நெல் கொள்முதல் செய்யப்பட்டு வருகின்றது. இதனிடையே கீழ்பவானி வாய்க்காலில் அடிமடை பகுதிகளான நல்லாம்பட்டி, பெத்தாம்பாளையம், காஞ்சிக்கோவில், பள்ளபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 100 ஏக்கர் பரப்பளவில் முன்கூட்டியே நெல் விதைப்பு பணிகள் தொடங்கப்பட்டதால் தற்போது அறுவடைக்கு தயாராக உள்ளது.

ஏஎஸ்டி 16 என்ற குறுகிய கால நெற்பயிர்கள் பயிரிடப்பட்டதால் நெற்கதிர்கள் நன்கு முற்றிய நிலையில் உள்ளது. எனவே உடனடியாக கொள்முதல் நிலையங்கள் திறக்க வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர். இது குறித்து தமிழக விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் சுப்பு கூறியதாவது, காலிங்காரயன் பகுதியில் நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்பட்டு வருகின்றது.

இதே போல கீழ்பவானியில் காஞ்சிக்கோவில், நல்லாம்பட்டி உள்ளிட்ட குறிப்பிட்ட பகுதிகளில் குறுகிய கால் நெற்பயிர்கள் பயிரிடப்பட்டு அறுவடைக்கு தயாராக உள்ளது. எனவே உடனடியாக நெல்கொள்முதல் நிலையங்களை திறக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கொள்முதல் நிலையங்கள் அமைப்பதற்கு வசதியாக பொது இடத்தில் உள்ள கட்டிடத்தை விவசாயிகள் வாங்கிக்கொடுத்தால் தான் கொள்முதல் நிலையங்கள் அமைக்கப்படும் என்று அதிகாரிகள் நெருக்கடி கொடுக்கின்றனர். அதிகாரிகள் செய்ய வேண்டிய வேலையை விவசாயிகளிடம் சுமத்துவது ஏற்புடையது அல்ல. இவ்வாறு கூறினார். https://www.tnagrisnet.gov.in

நிருபர் ஈரோடு டுடே
https://www.erode.today