ஈரோடு ஆக 10:

நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தக்கோரி அம்மாபேட்டை ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர்கள் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மனு அளித்தனர். அம்மாபேட்டை ஊராட்சி ஒன்றியத்தில் மொத்தம் 17 கவுன்சிலர்கள் உள்ளனர். இதில் 4வது வார்டு கவுன்சிலர் விஜயநிர்மலா என்பவர் யூனியன் சேர்மனாக தேர்ந்தெடுக்கப்பட்டார். முறையாக கவுன்சில் கூட்டத்தை கூட்டுவதில்லை என்றும், குடிநீர் திட்டப்பணிகள் உள்பட அடிப்படை வசதிகள் செய்து கொடுக்காமல் யூனியன் சேர்மன் செயல்படுவதாக கவுன்சிலர்கள் தரப்பில் புகார் கூறி வந்தனர்.

மேலும் யூனியன் சேர்மனுக்கு கொடுத்து வந்த ஆதரவை வாபஸ் பெறுவதாக கூறி கடந்த மாதம் 6ம் தேதி 12 கவுன்சிலர்கள் சார்பில் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்திருந்தனர். இம்மனு மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பவானி எம்எல்ஏ கருப்பணன் தலைமையில் கவுன்சிலர்கள் சார்பில் நேற்று மீண்டும் மனு அளித்தனர். மனுவில், யூனியன் சேர்மனுக்கு எதிராக நம்பிக்கை இல்லாத தீர்மானம் கொண்டு வந்து, வாக்கெடுப்பு நடத்த உரிய நடவடிக்கையை எடுக்க வேண்டும். இது தொடர்பாக ஒரு வாரகாலத்திற்குள் உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபடுவோம். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

செய்தி நிருபர் ஈரோடு டுடே
https://erode.today