ஈரோடு டிச 10:

ஈரோடு மாவட்டம் அந்தியூர் தாலுகா கீழ்வாணி அரசு பள்ளி மாற்றுத்திறனாளி ஆசிரியர் சீ.மாதேஸ்வரன் சிறந்த பணிக்காக மாநில அரசின் விருது பெற்றார். அந்தியூர் தாலுகா கீழ்வாணி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ஆசிரியராக பணி செய்பவர் சீ.மாதேஸ்வரன். எம்.எஸ்.சி., பி.எட்., படித்து கணித பட்டதாரி ஆசிரியராக பணி செய்கிறார்.

தவழ்ந்து வரும் நிலை மாற்றுத்திறனாளியான இவர், சக்கர நாற்காலியில் பள்ளிக்கு வந்து செல்வார். பள்ளி குழந்தைகளிடம் மிகுந்த பற்று கொண்டு, கல்வி பயிற்றுவிப்பார். அத்துடன் தேசிய திறனாய்வு தேர்வுக்கு கடினமாக பயிற்சி வழங்கி பல மாணவ – மாணவியருக்கு அரசின் கல்வி உதவித்தொகை பெற்றுத்தர காரணமாக இருந்தார்.

கடந்த, 2020 பிப்ரவரி முதல் கொரோனாவுக்கான ஊரடங்கு, பள்ளிகள் மூடல் போன்ற நிலையில் இவர் யூ டியூப் சேனல் ஒன்றை தனது பள்ளி குழந்தைகளுக்காக துவக்கி, மொபைல் போனையை வகுப்பறை போல ஆக்கி படிக்க வைத்தார். கிராமத்தில் வசிக்கும் சில பள்ளி குழந்தைகளுக்கு, ஊரடங்கு நிலையில் பல உதவிகளும் செய்தார்.

இந்நிலையில் ‘அனைத்து நாடுகள் மாற்றுத்திறனாளிகள் தினத்தை’ முன்னிட்டு சேவை புரிந்த மாற்றுத்திறனாளிகளுக்கு மாவட்ட, மாநில அளவில் விருது வழங்கப்பட்டது. மாநில அளவிலான விருத்துக்கு ஆசிரியர் சீ.மாதேஸ்வரன் பரிந்துரைக்கப்பட்டார். கடந்த, 3ம் தேதி சென்னையில் நடந்த அனைத்து நாடுகள் மாற்றுத்திறனாளிகள் தின விழாவில் முதல்வர் ஸ்டாலினிடம் விருது, பதக்கம் பெற்று வந்தார்.

கை, கால் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளி பணியாளர்களில் மிகச்சிறப்பாக பணி செய்தமைக்காக, இந்த விருது இவருக்கு வழங்கப்பட்டது. நேற்று ஈரோடு வந்த ஆசிரியர் சீ.மாதேஸ்வரன், கலெக்டர் எச்.கிருஷ்ணனுண்ணியை சந்தித்து வாழ்த்து பெற்றார். அவருடன் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் கோதைச்செல்வி உடனிருந்தார். https://www.tnschools.tn.gov.in

நிருபர் ஈரோடு டுடே
https://www.erode.today