ஈரோடு சூன் 28: திருப்பூர், கோவை, சேலம் போன்ற பகுதியில் இருந்து வெளி மாநிலங்களுக்கு துணிகள், ஜவுளி ரகங்கள், நூல், கெமிக்கல், எலக்ட்ரானிக் பொருட்கள் லாரிகள், கன்டெய்னர் மூலம் அனுப்பும் பணி துவங்கியது. கொரோனாவால் கடந்த மார்ச், ஏப்ரல் மாதங்களில் குஜராத், மகராஷ்ட்டிரா, உத்திர பிரதேசம், ராஜஸ்தான், மேற்கு வங்காளம், ஒரிஸா, பீகார் போன்ற மாநிலங்களில் ஊரடங்கு துவங்கியது. அதுமுதல் ஈரோடு, திருப்பூர், கோவை, சேலம், கரூர், நாமக்கல் போன்ற மாவட்டங்களில் இருந்து லாரி, கன்டெய்னர்களில் ஆயத்த ஆடை, நூல், துணி, நைலான், பிளாஸ்டிக் பொருட்கள், கெமிக்கல், எலக்ட்ரானிக், வெண்ணெய், நெய், பால் பொருட்கள், இயந்திரங்கள், முட்டை, கறிக்கோழி போன்றவை சென்று வருவது குறைந்தது. அதுபோல வடமாநிலங்களில் இருந்து ஆயத்த ஆடை, கெமிக்கல், நூல், நைலான் பொருட்கள், பிளாஸ்டிக் பொருட்கள், இயந்திர பாகங்கள், மளிகை பொருட்கள் அனுப்பி வைப்பதும் நின்றது. கடந்த ஏப்ரல் மாதம் லாரி புக்கிங் செய்யும் அலுவலகம் மூலம் பொருட்களை அனுப்பி, திரும்ப பெறும் பணி படிப்படியாக குறைந்து, மே முதல் வாரம் முதல் முற்றிலும் தடைபட்டது. தற்போது, பல்வேறு தளர்வால் வெளிமாநிலங்களுக்கு பொருட்கள் அனுப்ப துவங்கினர். இதுபற்றி, லாரி புக்கிங் அலுவலக நிர்வாகிகள் கூறியதாவது: கடந்த, 15 நாட்களாக படிப்படியாக துணி, நூல், கெமிக்கல், எலக்ட்ரானிக், எலக்டரிக்கல் பொருட்கள், பிளாஸ்டிக் பொருள், மளிகை போன்றவை அனுப்பி, திரும்ப பெறும் பணி துவங்கியது. வழக்கமாக ஈரோட்டில் இருந்து குஜராத், மஹராஷ்டிரா, உத்தர பிரதேசம், ராஜஸ்தான், மேற்கு வங்காளம், ஒரிஸா, பீகார் போன்ற மாநிலங்களுக்கு தினமும் 800 முதல் 900 லாரி, கன்டெய்னர்கள் சென்று வரும். தற்போது 80 முதல் 100 வாகனங்களில் மட்டும் சரக்கு போக்குவரத்து துவங்கி உள்ளது. சில தளர்வுகளால் காலை 6 மணி முதல் மதியம் 12 மணி வரை மட்டும் பொருட்களை ஏற்றி இறக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. ஈரோடு பகுதியில் ஜவுளி கடைகள், அதனை சார்ந்த விசைத்தறி, கைத்தறி நிறுவனங்கள் இயங்காததால் ஜவுளி, நூல் போன்றவைகள் வெளிமாநிலங்களில் இருந்து வந்து, குடோனில் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. பெரிய ஆலைகளுக்கு செல்லும் நூல் மட்டும் உடனுக்குடன் எடுத்து செல்லப்படுகிறது. அதுபோல ஈரோடு பகுதியில் உணவு பொருள், ஜவுளி ரகங்கள் உற்பத்தி இல்லாததால் வெளி மாநிலங்களுக்கு குறைந்த அளவே அனுப்பப்படுகிறது. முன்பு குஜராத்தில் இருந்து மூன்று முதல் நான்கு நாளில் ஈரோட்டுக்கு லாரிகள் வந்து சேரும். தற்போது கடைகள் இல்லாததால் டிரைவர்களே சமைத்து, ஓய்வெடுத்து, சோதனை சாவடிகளை கடந்து வருவதால் இரண்டு நாள் தாமதம் ஆகிறது. கொரோனா அச்சத்தால் டிரைவர், கிளீனர் தயங்குகின்றனர். பெரும்பாலான மாவட்டங்களில் உற்பத்தி இருந்தாலும், கடை திறந்து விற்பனை இல்லாததால், ஆங்காங்கு குடோன்களிலேயே பொருட்கள் தேக்கி வைக்கும் நிலையே உள்ளது. இருப்பினும், ஓரிரு வாரத்தில் முழு அளவில் போக்குவரத்து துவங்கும். வழக்கமாக ஓணம், அக்., – நவ., மாதம் வரும் தீபாவளி, கிறிஸ்துமஸ், புத்தாண்டு, பொங்கல் போன்ற பண்டிகைகளை குறிவைத்து, ஜூன் முதல் டிச., வரை அதிகமாக வெளிமாநிலங்களுக்கு ஜவுளி உள்ளிட்ட பல்வேறு பொருள் அனுப்பியும், திரும்ப பெற்று வருவர். இந்தாண்டு, இதுவரை இப்பணி துவங்கவில்லை. இப்பணி துவங்கும்போது லாரி போக்குவரத்து அதிகரிக்கும் என எதிர்பார்க்கிறோம். இவ்வாறு கூறினார்.
செய்தி நிருபர் ஈரோடு டுடே