ஈரோடு சூலை 25:

மலைக்கிராமங்களில் உள்ள பழங்குடி விவசாயிகளுக்கு ஒன்றிய அரசின் கிஷான் நிதி உதவி வழங்க மறுப்பதாக குற்றம் சாட்டி உள்ளனர். பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதி எனப்படும் பிரதமரின் விவசாய நிதி திட்டத்தின் கீழ் நலிந்த விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் 3 தவணைகளாக ரூ.6 ஆயிரம் நிதியுதவி வழங்கும் திட்டம், கடந்த 2018ம் ஆண்டு முதல் ஒன்றிய அரசின் சார்பில் செயல்படுத்தப்பட்டு வருகின்றது. இந்நிலையில் இத்திட்டத்தின் கீழ் ஈரோடு மாவட்டத்தில் மலைக்கிராமங்களை சேர்ந்த பழங்குடி விவசாயிகள் பெரும்பான்மையானோர் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது. இது குறித்து தமிழ்நாடு பழங்குடி மக்கள் சங்க நிர்வாகி குணசேகரன் கூறியதாவது, ஈரோடு மாவட்டத்தில் தாளவாடி, கடம்பூர், பர்கூர் ஆகிய மலைக்கிராமங்களில் வசிக்கும் பழங்குடி விவசாயிகளுக்கு அரசின் திட்டங்கள் எதுவும் சென்று சேராமல் உள்ளது. அவர்களுக்கு சொந்தமான நிலங்கள் கூட வெளிநபர்களால் பறிக்கப்பட்டுள்ளது. கால்நடைகளை பட்டி போட்டு வளர்க்க வனத்துறை தடை விதித்துள்ளது. செட்டில்மென்ட் நிலங்களுக்கு பட்டா வழங்கப்படாமல் உள்ளது. மலைக்கிராமங்களில் உள்ள பெரும்பாலான விவசாயிகளுக்கு மத்திய அரசின் கிசான் நிதி உதவித்திட்டம் கிடைக்காமல் உள்ளது. இது தொடர்பாக மத்திய வேளாண் அமைச்சகத்திற்கு மனு அனுப்பபட்டதையடுத்து இது தொடர்பாக விசாரணை நடத்தி நிதி உதவி கிடைக்க நடவடிக்கை எடுக்கவும், மாவட்ட வேளாண் இணை இயக்குநரிடம் மனு அளிக்கவும் உத்தரவிட்டது. ஆனால் மனு வழங்கி ஓராண்டாகியும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. பழங்குடி மக்களின் நிபந்தனை பட்டா பழங்குடி இல்லாத மக்களுக்கு சட்டவிரோதமாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக தேசிய மனித உரிமை ஆணையத்திடம் புகார் அளித்து உடனடியாக நிலங்களை மீட்க உத்தரவிட்டு 3 ஆண்டுகளாகியும் இது வரை நடவடிக்கை இல்லை. வன உரிமை சட்டங்கள் குறித்து அதிகாரிகளுக்கு எதுவும் தெரிவதில்லை. எனவே மாவட்ட நிர்வாகம் பழங்குடி மக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். இவ்வாறு குணசேகரன் கூறினார்.

செய்தி நிருபர் ஈரோடு டுடே
https://www:erode.today