ஈரோடு ஆக 12:

பெருந்துறையில் உள்ள ஈரோடு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனைத்து நோய்களுக்கான சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருவதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். பெருந்துறையில் உள்ள ஈரோடு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையானது கடந்தாண்டு கொரோனா முதல் அலையின் போது கொரோனா சிறப்பு சிகிச்சை மையமாக மாற்றப்பட்டு கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஈரோடு மாவட்டம் மட்டுமின்றி அருகாமையில் உள்ள திருப்பூர், சேலம், நாமக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான கொரோனா நோயாளிகள் சிகிச்சைக்காக இம்மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

இரண்டாம் அலையில் கொரோனா நோயாளிகளுக்கு ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்படாத வகையில், சிறப்பு நடவடிக்கைககள் எடுக்கப்பட்டு நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. கொரோனா சிகிச்சை மையமாக மாற்றப்பட்டதையடுத்து பிற நோயாளிகள் அனுமதி மறுக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் ஈரோடு மாவட்டத்தில் கொரோனா பரவல் ஓரளவு கட்டுக்குள் இருப்பதால் கடந்த சில நாட்களாக பிற நோயாளிகளுக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக மருத்துவக்கல்லூரி நிர்வாகம் தெரிவித்துள்ளது. இது குறித்து ஈரோடு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவனையின் டீன் மணி கூறியதாவது, மாவட்டத்தில் கொரோனா பரவல் கட்டுக்குள் வந்துள்ளதை அடுத்து சிகிச்சைக்கு வரும் நோயாளிகளின் எண்ணிக்கை குறைந்துவிட்டது.

70 பேர் மட்டுமே தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.இதையடுத்து கடந்த சில நாட்களாக பிற நோய்களுக்கு சிகிச்சைக்கு வருபவர்களுக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. கொரோனா நோயாளிகளுக்கு என்று தனி கட்டிடமும், பிற நோயாளிகளுக்கு தனி கட்டிடமும் ஒதுக்கப்பட்டுள்ளது. இதே போல ஆபரேசன் தியேட்டரும் தனியாக ஒதுக்கப்பட்டுள்ளது. கேன்சர் நோயாளிகளுக்கு தனியாக சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. கருப்பு பூஞ்சை பாதிப்பு காரணமாக 12 பேர் தனியாக சிகிச்சை பெற்று வருகின்றனர். இவ்வாறு டீன் மணி கூறினார்.

செய்தி நிருபர் ஈரோடு டுடே
https://erode.today