ஈரோடு செப் 28: ஈரோடு, வெண்டிபாளையம் அருகே ரெயில்வே தண்டவாளத்தை வாகனங்கள் கடந்து செல்ல நுழைவு பாலம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த நுழைவு பாலத்தில் இலகு ரக வாகனங்கள், இரு சக்கர வாகனங்கள் மட்டும் செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
ஆனால், கனரக வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டு, பாலத்தின் முன்பாக இரும்பு தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று அதிகாலை சுமார் 4 மணியளவில் நாமக்கல் மாவட்டம் கொக்கராயன்பேட்டை பகுதியில் இருந்து பேப்பர் பாரம் ஏற்றிக் கொண்டு திண்டுக்கல் மாவட்டம் செல்வதற்காக வெண்டிபாளையம் பேரேஜ் வழியாக லாரி ஒன்று வந்தது.
லாரியின் டிரைவர், வெண்டிபாளையம் பழைய ரெயில்வே நுழைவு பாலத்தில் தடுப்புகளை மீறி லாரியை ஓட்டி சென்றார்.அப்போது லாரியின் பின்புறம் ஏற்றப்பட்டிருந்த பாரம் தடுப்பு கம்பியல் மோதி, பாலத்தின் குறுக்கே நின்றது. இதில், தடுப்பு கம்பி இடிந்து சாலையில் விழுந்தது. லாரியும் சிக்கி நின்றது. இதுகுறித்து தகவல் அறிந்து வந்த போலீசார், லாரியை கிரேன் வாகனம் மூலம் அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.
இதனால், அப்பகுதியில் 4 மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும், காலை நேரம் என்பதால் வேலைகளுக்கு செல்லும் பொதுமக்களும், பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகளும் அவ்வழியாக செல்ல முடியாமல் பெரும் அவதிக்குள்ளாகினர். பின்னர் அங்கிருந்து லாரி அகற்றப்பட்டது. அதன் பின்னரே போக்குவரத்து சீரானது.
செய்தி நிருபர் ஈரோடு டுடே
https://www.erode.today/