ஈரோடு மே 28: ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலத்தில் இருந்து திம்பம் மலைப்பாதை வழியாக பெங்களுரு செல்லும் பாதை, மிகவும் அடர்ந்த வனப்பகுதியாகும்.இங்கு, 28 கொண்டைஊசி வளைவுகள் உள்ளன.
அதில் பல கொண்டை ஊசி வளைவுகள் மிகவும் குறுகலாகவும், சரிவானதாகவும் அமைந்திருக்கும். இப்பாதையில் அதிக உயரம், அதிக பாரம், அதிக நீளம் உள்ள வாகனங்கள் செல்ல அனுமதி இல்லை. இருப்பினும், வனத்துறையினர், போலீசார் போன்றோர், அதுபோன்ற வாகனங்களை அனுமதிப்பதால், வளைவுகளில் திரும்ப முடியாமல், வாகனங்கள் சிக்கி கொள்ளும். அல்லது கவிழ்ந்து பெரிய விபத்தை ஏற்படுத்தும்.
அவ்விடத்தில் உடனடியாக மீட்பு பணியை மேற்கொள்ள முடியாது என்பதால், பல மணி நேரம் போக்குவரத்து ஸ்தம்பிக்கும். நேற்று மதியம், மிக நீளமான லாரி, ஒன்பதாவது கொண்டை ஊசி வளைவில் திரும்ப முடியாமல், தடுப்பு சுவரில் மோதி நின்றது.
சுவரில் மோதி நிற்காமல் இருந்தால், மிகப்பெரிய பள்ளத்தில் விழுந்து உயிர் பலியை ஏற்படுத்தி இருக்கும். அவ்வாறு இல்லாமல், சுவரில் மோதி நின்றதால், இரண்டு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதற்கிடையில், அவ்வழியாக இறந்தவர் உடலை ஏற்றி வந்த ஆம்புலன்ஸ் வாகனத்தை, பல்வேறு தரப்பினர் சேர்ந்து குறுகலான இடைவெளியில் அனுப்பி வைத்தது, நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.இரண்டு மணி நேரத்துக்குப்பின், லாரியை மற்றொரு டிரைவர் மூலம் திருப்பி, அனுப்பி வைத்ததால், போக்குவரத்து மீண்டும் துவங்கியது.
நிருபர்.
ஈரோடு டுடே