ஈரோடு செப் 26:

கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் பேராயுதமாக தடுப்பூசி உள்ளது. இதனையடுத்து தமிழகத்தில் தடுப்பூசி போடும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது.

கோவேக்சின், கோவிஷில்டு தடுப்பூசிகள் பெரும்பாலும் மக்களுக்கு போடப்பட்டு வருகிறது. ஈரோடு மாவட்டத்திலும் தடுப்பூசி போடும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது. பொதுமக்கள் முதல் டோஸ் மற்றும் இரண்டாம் டோஸ் செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் தடுப்பூசி போடுவதை ஊக்கப்படுத்தும் வகையில் தமிழகம் முழுவதும் மாபெரும் தடுப்பூசி முகாம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி தமிழகம் முழுவதும் கடந்த 12ம் தேதி முதல் முறையாக மாபெரும் தடுப்பூசி முகாம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து 19ம் தேதி இரண்டாவது முறையாக மாபெரும் தடுப்பூசி முகாம் நடைபெற்றது.

இதனைத் தொடர்ந்து இன்று மூன்றாவது முறையாக தமிழகம் முழுவதும் மாபெரும் தடுப்பூசி முகாம் தொடங்கியது. ஈரோடு மாவட்டத்தில் முதற் கட்ட தடுப்பூசி முகாம் 847 மையங்களில் 97 ஆயிரத்து 198 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. இரண்டாவது கட்டமாக நடந்த தடுப்பூசி முகாம் 538 மையங்களில் 48 ஆயிரம் பேருக்கு செலுத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து இன்று 3-வது கட்டமாக தமிழகம் முழுவதும் மாபெரும் தடுப்பூசி முகாம் தொடங்கியது. அதன்படி ஈரோடு மாவட்டத்தில் 3-வது கட்டமாக 579 மையங்களில் 18 வயதுக்கு மேற்பட்ட அனைத்து மக்களுக்கும் இன்று காலை 7 மணி முதல் மாவட்டம் முழுவதும் தடுப்பூசி போடும் பணி தொடங்கியது. இதில் முதியவர்கள் ஆர்வத்துடன் பங்கேற்று தடுப்பூசி செலுத்துகின்றனர். காலை 7 மணிக்கு தொடங்கிய தடுப்பூசி முகாம் இரவு 7 மணி வரை நடைபெற உள்ளது. ஈரோடு மாநகர் பகுதியில் 60 வார்டிலும் ஒவ்வொரு வார்டில் தலா ஒரு மையம் என 60 மையங்களில் தடுப்பூசி போடும் பணி நடந்தது. இதுபோக 4 சிறப்பு மையங்களிலும் தடுப்பூசி போட ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மக்கள் ஆர்வத்துடன் வந்து தடுப்பூசி செலுத்துகின்றனர். 

இன்று நடந்த முகாமில் கோவிஷில்டு முதல் மற்றும் இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டது. இன்று ஒரு லட்சம் மக்களுக்கு தடுப்பூசி போட இலக்கு நிர்ணயிக்கப்பட்டு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. மாநகர் பகுதியில் 20 ஆயிரம் மக்களுக்கு தடுப்பூசி போட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதுபோல் கோபி நகராட்சி பகுதியிலும் இன்று தடுப்பூசி போடும் முகாம் இன்று நடந்தது. 11 இடங்களில் தடுப்பூசி முகாம் நடந்தது. நகராட்சி ஆணையாளர் பிரேம் ஆனந்த் உத்தரவுப்படி நகராட்சி துப்புரவு அலுவலர் துப்புரவு ஆய்வாளர் செந்தில்குமார் ஆகியோர் முகாமுக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர். வட்டார மருத்துவ அலுவலர் செந்தில்குமார் உத்தரவுப்படி மருத்துவ அலுவலர் ராஜாத்தி தலைமையில் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்கள் தடுப்பூசி போடும் பணியில் ஈடுபட்டனர்.

இதேபோல் அந்தியூர், பெருந்துறை, சத்தியமங்கலம், மொடக்குறிச்சி, கொடுமுடி, நம்பியூர், தாளவாடி என மாவட்டம் முழுவதும் 579 மையங்களில் தடுப்பூசி முகாம் நடைபெற்றது. இதற்காக மாவட்டம் முழுவதும் 2,300-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் தடுப்பூசி செலுத்தும் பணியில் ஈடுப்பட்டனர். 86 வாகனங்கள் முகாமுக்கு பயன்படுத்தப்பட்டன. மக்கள் ஆர்வத்துடன் தடுப்பூசி செலுத்தி கொண்டனர். மக்கள் ஆதார் கார்டு ஜெராக்ஸ் கொண்டு வந்து தடுப்பூசி செலுத்தி கொண்டனர். இந்த முறை தடுப்பூசி போடும் பணியில் கல்லூரி மாணவர்களும் அதிகளவில் பங்கேற்றனர். இதையடுத்து அவர்களுக்கு தடுப்பூசி போட்டதற்கான எஸ்.எம்.எஸ்., உடனடியாக அவர்களது செல்போன் எண்ணுக்கு அனுப்பப்பட்டது.

நிருபர் ஈரோடு டுடே
https://www.erode.today/