ஈரோடு ஆக 6:

மீன் வளர்ப்பு குளங்கள் அமைப்பவர்களுக்கு மானியம் வழங்கப்பட உள்ளதாக கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தெரிவித்து உள்ளார். ஈரோடு மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்து இருப்பதாவது:- தேசிய வேளாண் அபிவிருத்தி திட்டத்தின் கீழ் இந்த ஆண்டு மீன் வளர்ப்பு குளங்கள் அமைப்பவர்களுக்கு மீன் குஞ்சுகள் மற்றும் மீன் தீவனங்கள் வாங்குவதற்கு மானியம் வழங்கப்படுகிறது. அதன்படி, ஒரு ஏக்கரில் ரூ.7 லட்சம் செலவில் மீன் வளர்ப்பு குளங்கள் அமைப்பவர்களுக்கு, அதிபட்சமாக 50 சதவீதம் மானியமாக ரூ.3 லட்சத்து 50 ஆயிரம் வழங்கப்படும்.

மேலும் ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் செலவில் மீன் குஞ்சுகள் மற்றும் மீன் தீவனங்கள் வாங்குவதற்கு 40 சதவீதம் மானியம் அதிகபட்சமாக ரூ.60 ஆயிரம் என மொத்தம் ரூ.4 லட்சத்து 10 ஆயிரம் பின்நிலை மானியமாக அளிக்கப்படும். குறைந்தபட்சம் கால் ஏக்கர் முதல் மீன் வளர்ப்பு குளங்கள் அமைக்க விரும்புவர்கள் மானியம் வேண்டி விண்ணப்பிக்கலாம் .மீன் வளர்ப்பு குளங்கள் புதிதாக அமைக்க விருப்பம் உள்ளவர்கள், சொந்த நிலம் அல்லது 5 ஆண்டு குத்தகைக்கு பெற்ற நிலம் வைத்திருக்க வேண்டும்.

அதிக அளவில் விவசாயிகள் விண்ணப்பத்தால், முதலில் வருவோருக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் விவசாயிகள் தேர்வு செய்யப்படுவார்கள். மேலும் விவரங்களுக்கு ஈரோடு பெருந்துறை ரோடு மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகில் உள்ள, மீன் வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குனர் அலுவலகத்தை அணுகலாம். மேலும் 0424 2221912 மற்றும் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொண்டு பயன் பெறலாம். இவ்வாறு மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தெரிவித்துள்ளார்

செய்தி நிருபர் ஈரோடு டுடே
https://erode.today