ஈரோடு சூலை 23:

விவசாயத்திற்கான மும்முனை மின்சாரம் தடையின்றி வழங்க வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.இது குறித்து தற்சார்பு விவசாயிகள் சங்க தலைவர் பொன்னையன், தமிழ்நாடு அரசுக்கு அனுப்பி உள்ள மனுவில் கூறியிருப்பதாவது, கடந்த அ.தி.மு.க, ஆட்சிக் காலத்தில் பகலில் 6 மணி நேரமும், இரவு 8 மணி நேரமும் என நாளொன்றுக்கு 14 மணி நேரம் மும்முனை மின்சாரம் கிடைத்து வந்தது. இந்த கட்டுப்பாட்டு மும்முனை மின் வழங்கல் விவசாயிகளுக்கு பெரும் இடையூறாக இருப்பதாக தொடர்ந்து அரசுக்கு கோரிக்கை வைத்து வந்தோம். விவசாயத்திற்கு 24 மணி நேரமும் தடங்களற்ற மும்முனை மின்சாரம் வழங்கப்படும் என்று தி.மு.க, தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி கொடுத்திருந்தது. ஆனால் தற்போது மும்முனை மின்சாரம் விநியோகிப்பதில் தடைகள் ஏற்படுகின்றது. கொடுக்கப்படுகிற மும்முனை மின்சாரம் காலவரையின்றி எப்பொழுது வேண்டுமானாலும் வருகிறது. எப்பொழுது வேண்டுமானாலும் நிறுத்தப்படுகிறது. இந்த நிலையற்ற மும்முனை மின் வழங்கல் நடைமுறையின் காரணமாக விவசாயிகள் திட்டமிட்டு தண்ணீர் பாய்ச்ச இயலாமல் மிகவும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். தற்போது பயிர் செய்யும் காலமாக இருப்பதால் விதைப்பும், நடவு பணிகளும் செய்வதற்கு மும்முனை மின்சாரம் மிகவும் தேவையானதாக இருக்கிறது. எனவே 24 மணி நேரமும் கட்டுப்பாடற்ற சீரான மும்முனை மின்சாரம் வழங்க வேண்டுமென தமிழக அரசையும், மின்துறையையும் கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

செய்தி நிருபர் ஈரோடு டுடே
https://www:erode.today