ஈரோடு சூலை 28:
ஈரோடு பன்னீர்செல்வம் பார்க் அருகே ஈரோடு ஜவுளி சந்தை (கனி மார்க்கெட்) செயல்பட்டு வருகிறது. இங்கு தினசரி கடைகள், வாரச் சந்தை செயல்பட்டு வருகிறது. குறிப்பாக திங்கட்கிழமை இரவு முதல் செவ்வாய்க்கிழமை மாலை வரை நடைபெறும் வாரச்சந்தை உலகப் புகழ் பெற்றது. வாரச்சந்தைக்கு தமிழகத்தில் அனைத்து மாவட்டத்தில் இருந்து வியாபாரிகளும், கேரளா, மகாராஷ்டிரா, கர்நாடகா, ஆந்திரா போன்ற வெளி மாநிலங்களில் இருந்தும் வியாபாரிகள் ஏராளமானோர் வருவார்கள். மற்ற இடங்களைக் காட்டிலும் இங்கு துணி விலைகள் குறைவாக இருப்பதால் இங்கே பொதுமக்கள் கூட்டம் இருக்கும். இந்நிலையில் கொரோனா தாக்கம் காரணமாக ஜவுளி சந்தை செயல்பட அனுமதி மறுக்கப்பட்டது. பின்னர் மெல்ல மெல்ல இயல்பு நிலை திரும்பியதால் தற்போது மீண்டும் ஜவுளி சந்தை செயல்பட்டு வருகிறது. ஆனால் வாரச்சந்தைக்கு அனுமதி இல்லை. தினசரி சந்தை மட்டுமே நடந்து வந்தது கடந்த சில நாட்களாக வியாபாரம் மந்த நிலையிலேயே இருந்தது. இந்நிலையில் ஆடி மாதம் பிறந்ததை யொட்டி சில்லரை வியாபாரம் சூடு பிடிக்கத் தொடங்கியது. கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் சில்லரை வியாபாரம் அமோகமாக நடந்து வருகிறது. இன்று மட்டும் 60 சதவீத சில்லரை வியாபாரம் நடைபெற்றதாக வியாபாரிகள் தெரிவித்தனர். ஆனால் அதேநேரம் மொத்த வியாபாரம் சுமாராகவே இருந்தது. இன்று தமிழகம் முழுவதும் இருந்து பல்வேறு பகுதியில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட வியாபாரிகள் வந்திருந்தனர். இதைப்போல் கேரளா ஆந்திரா வியாபாரிகள் வந்திருந்தனர். காட்டன் வகை துணிகள், காவி மஞ்சள் சேலை அதிக அளவு விற்பனையானது. அரசு அறிவித்துள்ள பாதுகாப்பு வழிமுறையுடன் வியாபாரம் நடைபெற்றது. ஆடி மாதம் முடியும் வரை வியாபாரம் அமோகமாக நடைபெறும் என்று வியாபாரிகள் தெரிவித்தனர்.
செய்தி நிருபர் ஈரோடு டுடே
https://erode.today