ஈரோடு ஆக 23:

ஈரோட்டில் ஒரு தரப்பு அரசு ஊழியர் சங்கம் நடத்திய கூட்டத்துக்கு இடையே வந்த மற்றொரு தரப்பு அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் செய்து, பதட்டத்தை ஏற்படுத்தினர். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் என்பது மாநில தலைவர் அன்பரசன் என்பவர் தலைமையில் ஒரு குழுவாகவும், மாநில தலைவர் தமிழ்செல்வி என்பவர் தலைமையில் மற்றொரு குழுவாகவும் பிரிந்து செயல்படுகிறது. தமிழ்செல்வி தலைமையில் செயல்படும் கூட்டத்தினர் நேற்று ஈரோட்டில் செய்தியாளர்கள் சந்திப்பு கூட்டம் நடத்தினர்.

மாநில பொதுச் செயலாளர் லட்சுமிநாராயணன், மாநில தலைவர் தமிழ்செல்வி ஆகியோர் கூட்டாக நிருபர்களிடம் பேசியதாவது: மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையாக மாநில அரசு ஊழியர்களுக்கும் அகவிலைப்படி உயர்வை வழங்க வேண்டும் என பல மாதங்களாக வலியுறுத்தி வருகிறோம். நிதிச்சுமை அதிகமாக இருப்பதால் இந்தாண்டு அகவிலைப்படி வழங்க இயலாது. வரும் 2022ம் ஆண்டில்தான் வழங்க முடியும் என்று நிதியமைச்சர் அறிவித்தார். ஏற்கனவே சரண்டர் தொகை வழங்காமல் இழப்பை சந்தித்த அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் தொடர்ந்து நிதி பாதிப்பை அடைகின்றனர்.

இவற்றுடன் பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்துதல், தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்ட முன்னாள் மாநில தலைவர் சுப்பிரமணியன் மீதான நடவடிக்கையை கைவிடுதல் போன்ற கோரிக்கையை வலியுறுத்தி 31ம் தேதி கோரிக்கை அட்டை அணிந்து பணி செய்வது, வரும் செப்டம்பர் 9ம் தேதி கலெக்டர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடத்துவது என முடிவு செய்துள்ளோம் என்றார்.

அப்போது அங்கு வந்த, வீரப்பன்சத்திரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயமுருகன் மற்றும் போலீசார் செய்தியாளர்கள் கூட்டத்தை முடித்துவிட்டு வெளியே செல்லும்படி உத்தரவிட்டனர். அப்போது அங்கு வந்த மற்றொரு பிரிவை சேர்ந்த தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாநில துணை தலைவர் மு.சீனிவாசன் தலைமையில் ஏராளமானவர்கள் அறைக்குள் செல்ல முயன்றதுடன் ஆர்ப்பாட்டம் செய்தனர். போலீசாருக்கு எதிராகவும் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

அங்கு பதட்டமான சூழல் நிலவியதால், ஒரு தரப்பினரை நிறுத்திவிட்டு  அறையில் இருந்த தமிழ்செல்வி மற்றும் நிர்வாகிகளை அனுப்பி வைத்தனர். இதையடுத்து மற்றொரு குழுவினரை அனுப்பினர். பின்னர் மாநில துணை தலைவர் சீனிவாசன் கூறியது, சில அரசியல் கட்சிகளின் பின்னணியில் இயங்கும் போலி சங்கத்தினர் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் கொடி, சின்னத்தை பயன்படுத்துகின்றனர். அவ்வாறு பயன்படுத்துவது சட்டப்படி தவறு என கலெக்டர் உள்ளிட்ட அதிகாரிகளிடம் புகார் செய்துள்ளோம். எனவே, அவர்களை கைது செய்ய வேண்டும், என்றனர்.

செய்தி நிருபர் ஈரோடு டுடே
https://erode.today