ஈரோடு ஆக 24:

தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்கும் வகையில் கடந்த ஏப்ரல் மாதம் 23ம் தேதி முதல் முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, சினிமா தியேட்டர்கள் மூடப்பட்டன. இதைத் தொடர்ந்து, மக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டும், கொரோனா தொற்று குறைய தொடங்கியதையொட்டி ஊரடங்கில் அரசு பல்வேறு தளர்வுகள் அறிவித்து வருகிறது.

தமிழகத்தில் சினிமா தியேட்டர்கள் அனைத்தும் கடந்த ஏப்ரல் 23ம் தேதி முதல் மூடப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட மூன்று மாதமாக தியேட்டர்கள் மூடப்பட்டு உள்ளது. ஈரோடு மாவட்டத்தை பொருத்தவரை மாவட்டம் முழுவதும் 50 தியேட்டர்கள் உள்ளது. இதில் மாநகர் பகுதியில் மட்டும் 11 தியேட்டர்கள் உள்ளன. இந்நிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஊரடங்கில் கூடுதல் தளர்வுகள் வழங்கி இன்று முதல் 50 சதவீத பார்வையாளர்களுடன் தியேட்டர்களை திறந்து கொள்ள அனுமதி அளித்தார். இதனை அடுத்து, ஈரோடு மாவட்டத்தில் உள்ள தியேட்டர்களில் சுத்தப்படுத்தும் பணி நோய் தடுப்பு நடவடிக்கையாக கிருமி நாசினி தெளிக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.

தியேட்டர்கள் ஊழியர்கள் அனைவருக்கும் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. தியேட்டருக்கு வரும் பொதுமக்களுக்கு நுழைவாயிலில் தெர்மல் ஸ்கேனர் மூலம் உடல் உறுப்பு பரிசோதனை நடவடிக்கை எடுத்து வருகிறது. மேலும் அவர்கள் கையில் கிருமிநாசினி  – சனிடைசர் தெளிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

முகக் கவசம் கண்டிப்பாக அணிந்துவர உத்தரவிடப்பட்டுள்ளது. முக கவசம் அணிந்து வராத பொதுமக்களுக்கு தியேட்டர் சார்பில் முக கவசம் வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இன்று தியேட்டர்கள் திறக்க அனுமதி கிடைத்தாலும் ஈரோடு மாவட்டத்தை பொறுத்தவரை வரும் 27ம் தேதி முதல் புதிய படங்கள் வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளதாக, ஈரோடு மாவட்டத்தில் தியேட்டர் உரிமையாளர்கள் சங்கத்தின் மாவட்டத் தலைவர் செந்தில்நாதன் கூறியுள்ளார். இதனால் இன்று ஈரோடு மாவட்டத்தில் தியேட்டர்கள் திறந்திருந்தாலும் திரைப்படங்கள் வெளியிடப்படவில்லை. ஒரு சில தியேட்டர்களில் மட்டும் பழைய படங்கள் திரையிடப்பட்டன.

செய்தி நிருபர் ஈரோடு டுடே
https://erode.today