ஈரோடு டிச 8:

ஈரோடு டி.ஐ.ஐ.சி. கிளை அலுவலகத்தில் சிறப்பு தொழில் கடன் விழா இன்று (புதன்கிழமை) தொடங்கப்பட உள்ளதாக கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தெரிவித்து உள்ளார். ஈரோடு மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்து இருப்பதாவது:

தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகம் (டி.ஐ.ஐ.சி.) சார்பில், குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் புதிய தொழிற்சாலைகளை நிறுவுவதற்கும் தற்போது இயங்கி கொண்டிருக்கும் நிறுவனத்தினை விரிவு படுத்துவதற்கும், உற்பத்தியை பன்முக படுத்துவதற்கும் பல்வேறு சிறப்பு திட்டங்களின் கீழ் கடன் உதவி வழங்கி வருகிறது.

டி.ஐ.ஐ.சி.யின் ஈரோடு கிளை அலுவலகத்தில் இன்று (புதன்கிழமை) முதல் வருகிற 15ம் தேதி வரை, குறு சிறு மற்றும் நடுத்தர தொழில்களுக்கான சிறப்பு தொழில் கடன் விழா நடைபெறுகிறது. இந்த சிறப்பு தொழில் கடன் விழாவில் டி.ஐ.ஐ.சி.யின் சிறப்பு தொழில் திட்டங்கள், புதிய தொழில் முனைவோர், தொழில் நிறுவன மேம்பாட்டு திட்டம் மற்றும் மத்திய, மாநில அரசுகளின் மூலதன மானிய திட்டங்கள் மற்றும் டி.ஐ.ஐ.சி.யின் 6 சதவீத வட்டி மானியதிட்டங்கள் போன்றவை குறித்து விரிவான விளக்கங்கள் அளிக்கப்படுகிறது.

மேலும் தகுதி வாய்ந்த தொழில்களுக்கு தமிழக அரசின் 25 சதவீத முதலீட்டு மானியம் ரூ.1 கோடியே 50 லட்சம் வரை விரைந்து பெற்றுதர ஆவண செய்யப்படுகிறது. இந்த விழாவில் சமர்ப்பிக்கப்படும் பொதுக்கடன் விண்ணப்பங்களுக்கு ஆய்வு கட்டணத்தில் 50 சதவீத சலுகை அளிக்கப்படும். தொழில் நிறுவன மேம்பாட்டு திட்டத்திற்கு ஆய்வு கட்டணத்தில் இருந்து முழுமையாக விலக்கு அளிக்கப்படுகிறது.

இந்த வாய்ப்பினை பயன்படுத்தி புதிய தொழில் முனைவோர், தொழில் அதிபர்கள் தங்கள் தொழில் திட்டங்களுடன் மேற்கண்ட அலுவலகத்திற்கு வருகை தந்து தொழில் கடன் மற்றும் மத்திய, மாநில அரசுகளின் மானிய சேவைகளை பயன்படுத்தி கொள்ளலாம். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தெரிவித்து உள்ளார். https://www.erode.nic.in  

நிருபர் ஈரோடு டுடே
https://www.erode.today/