ஈரோடு ஆக 11:

ஈரோடு மாவட்டத்தில் நடப்பாண்டு கடன் இலக்காக ரூ.13 ஆயிரத்து 336 கோடி நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக கலெக்டர் தெரிவித்துள்ளார். ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட அளவிலான வங்கியாளர்கள் குழு கூட்டம் கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தலைமையில் நேற்று நடைபெற்றது.

கூட்டத்தில் கலெக்டர் பேசியதாவது, ஈரோடு மாவட்டத்தில் 2021–-2022ம் ஆண்டிற்கான நிர்ணயிக்கப்பட்ட கடன் இலக்கான ரூ.13 ஆயிரத்து 336 கோடி அடைவதற்கு அனைத்து வங்கிகளும் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துகின்ற வகையில் மகளிர் திட்டம், மாவட்ட தொழில் மையம், தாட்கோ, வேளாண்மைத் துறை, மீன்வளத்துறை, கைத்தறித் துறை போன்ற பல்வேறு அரசு துறைகளின் மூலம் மகளிர் சுய உதவிக்குழுக்கள், விவசாயிகள், இளைஞர்கள், தொழில் முனைவோர்களுக்கு மானியத்துடன் கூடிய கடன்கள் வழங்கப்பட்டு வருகிறது.அரசுத்துறைகள் மூலம் பொதுமக்களுக்கு வழங்கப்படும் கடன் திட்டங்களை, தொடர்புடைய வங்கிகள் காலம் தாழ்த்தாமல் வழங்க வேண்டும்.

அப்போது தான் அரசு துறைகள் மீதும், வங்கிகள் மீதும் மக்களுக்கு நம்பிக்கை ஏற்படும். விண்ணப்பித்து நிலுவையிலுள்ள கடன் விண்ணப்பங்கள் மீது விரைந்து நடவடிக்கை மேற்கொண்டு கடன்களை வழங்கிடவும், குறிப்பாக விவசாயிகளுக்கு வழங்கப்படுகின்ற பயிர்கடன் மற்றும் சிறு, குறு தொழில்முனைவோர்களுக்கு வழங்கப்படுகின்ற கடன்கள் வழங்குவதில் எவ்வித புகார்களுக்கும் இடம் அளிக்காமலும், முன்னுரிமை அடிப்படையில் கடன் வழங்கிட வங்கிகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு கலெக்டர் கிருஷ்ணனுண்ணி பேசினார். 46 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.2.16 கோடி மதிப்பீட்டில் கடனுதவி பெறுவதற்கான உத்தரவு ஆணைகளை வழங்கினார். கூட்டத்தில் உதவி ஆட்சியர் (பயிற்சி) ஏகம்.ஜெ.சிங், மகளிர் திட்ட இயக்குநர் சீனிவாசன், மாவட்ட தொழில் மைய மேலாளர் திருமுருகன், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் ஆனந்த் குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

செய்தி நிருபர் ஈரோடு டுடே
https://erode.today