ஈரோடு செப் 10:
கலைஞரின் அனைத்து கிராம வேளாண் வளர்ச்சி திட்டம் ஈரோடு மாவட்டத்தில் 97 கிராமங்களில் செயல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. விசை சான்று மற்றும் அங்ககசான்று துறையின் மூலம் விதை உற்பத்தியாளர்களுக்கான பயிற்சி முகாம் பவானிசாகரில் நேற்று நடைபெற்றது.
இப்பயிற்சி முகாமிற்கு தலைமை தாங்கிய ஈரோடு மாவட்ட விதைச்சான்று மற்றும் அங்ககச்சான்று உதவி இயக்குநர் யசோதா பேசியதாவது,விதை உற்பத்தியாளர்கள் அனைவரும் விதைச்சான்று நடைமுறைகளை கடைபிடித்து தரமான விதை உற்பத்தியினை உறுதி செய்திட வேண்டும். ஈரோடு மாவட்டத்தில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சித்திட்டம் 97 கிராம ஊராட்சிகளில் செயல்படுத்தப்பட உள்ளது. மேலும் சத்தியமங்கலம், தாளவாடி, அந்தியூர் வட்டாரங்களில் உள்ள மலைப்பகுதி கிராமங்களில் சிறப்பு மலைப்பகுதி மேம்பாட்டுத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
எனவே இப்பகுதி விவசாயிகளை அதிக அளவில் தேர்வு செய்து உரிய தொழில் நுட்ப பயிற்சிகள் வழங்கி விதைப்பண்ணைகளை அமைக்க வேண்டும். இயற்கை வேளாண்மை செய்துவரும் விவசாயிகளை அங்ககச்சான்றுக்கு பதிவு செய்ய அதிகாரிகள் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.இவ்வாறு பேசினார்.பயிற்சி முகாமில் விதைப்பண்ணை பதிவு செய்தல், விதைப்பண்ணை பராமரிப்பு, பயிர் விலகு தூரம், பூச்சி மற்றும் நோய்த்தாக்குதலில் இருந்து விதைப்பயிரை பாதுகாத்தல், களைகளை நீக்கி தரமான விதை உற்பத்தி செய்வது உள்ளிட்ட தொழில் நுட்ப உத்திகள் குறித்து பயிற்சி வழங்கப்பட்டது.பயிற்சி முகாமில், விதைச்சான்று அலுவலர்கள், உதவி விசைசான்று அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
நிருபர் ஈரோடு டுடே
https://www.erode.today/