ஈரோடு டிச 11:

ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி ஒன்றிய பகுதியில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் அரசு மானியத்துடன் அமைக்கப்பட்டுள்ள நுண்ணீர் மற்றும் துணை நிலை நீர் மேலாண்மை செயல்பாடுகளை கலெக்டர் கிருஷ்ணனுண்ணி ஆய்வு செய்தார்.

பின்னர் அவர் கூறியது, வேளாண் துறை சார்பில் நுண்ணீர் பாசன திட்டத்தில், சிறு, குறு விவசாயிகளுக்கு, 100 சதவீத மானியமாக ஒரு ஏக்கருக்கு, 42 ஆயிரத்து, 781 ரூபாய், இதர விவசாயிகளுக்கு, 12.50 ஏக்கர் வரை, 75 சதவீத மானியமாக ஒரு ஏக்கருக்கு, 33 ஆயிரத்து, 231 ரூபாய் வழங்கப்படும். கரும்பு பயிருக்கு சொட்டு நீர் பாசனம் அமைக்க ஏக்கருக்கு, 19 ஆயிரத்து, 903 ரூபாய் வழங்கப்படும்.

நுண்ணீர் பாசன திட்டம் செயல்படுத்தும் விவசாயிகளை ஊக்குவிக்க, துணை நிலை மேலாண்மை செயல்பாடுகள் திட்டத்தில் மின் மோட்டார் அல்லது டீசல் பம்பு செட், 50 சதவீத பின்னேற்பு மானியமாக, 15 ஆயிரம் ரூபாய் வரையும், நீர் எடுத்து செல்லும் பி.வி.சி., குழாய்கள் நீர் ஆதாரத்தில் அமைக்க, 50 சதவீத பின்னேற்பு மானியமாக ஏக்கருக்கு, 10 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும். இதுபோன்ற பல்வேறு திட்டங்களை விவசாயிகள் பயன்படுத்த வேண்டும், என்றார்.

கொடுமுடி யூனியன் பகுதியில் துல்லிய பண்ணைய உழவர் உற்பத்தியாளர் நிறுவனம் சார்பில் அமைக்கப்பட்ட விதை மற்றும் விதைப்பு பொருட்கள் உற்பத்தி செய்தல் இயக்கம், விதை சுத்திகரிப்பு நிலையம், சேமிப்பு கிடங்குகளை நேரில் ஆய்வு செய்தார். வேளாண் இணை இயக்குனர் எஸ்.சின்னசாமி, துணை இயக்குனர் சிவகுமார், கலெக்டரின் நேர்முக உதவியாளர் சிவகுமார், உதவி இயக்குனர் வேலுசாமி உட்பட பலர் பங்கேற்றனர். https://www.tnagrisnet.tn.gov.in

நிருபர் ஈரோடு டுடே
https://www.erode.today