ஈரோடு ஆக 1:
ஈரோட்டில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் தமிழ்நாடு பால் உற்பத்தியாளர் சங்க மாநிலக்குழு கூட்டம் மாநில தலைவர் முனுசாமி தலைமையில் நடந்தது. மாநில பொதுச் செயலாளர் கே.முகம்மது அலி செய்தியாளர்களிடம் கூறியது: தமிழகத்தில் உள்ள ஆவின் நிறுவனங்கள் ரூ.ஆயிரம் கோடி நஷ்டத்தில் உள்ளன. ஆவின் நிறுவனத்துக்கு பால் ஊற்றியவர்களுக்கு ரூ.500 கோடி நிலுவைத்தொகை வழங்க வேண்டி உள்ளது. அத்துடன் 18 ஆவின் நிறுவனமாக இருந்து கடந்த சில மாதத்துக்கு முன் 25 ஆவின் நிறுவனமாக மாற்றப்பட்டுள்ளது. இதனால் நிர்வாக ரீதியாக செலவு மிகவும் அதிகரித்துள்ளது. தற்போதைய தமிழ்நாடு அரசு ஆவின் பால் விற்பனை விலையை ரூ.3 குறைத்துள்ளதால் ஆவின் நிறுவனங்களுக்கு தலா ரூ.270 முதல் ரூ.300 கோடி வரை இழப்பு ஏற்பட்டு வருகிறது. ஆவின் நிர்வாகம் சொசைட்டி மூலம் பால் உற்பத்தியாளர்களுக்கு போனஸ், ஊக்கத்தொகை, ஒரு கிலோ கால்நடை தீவனத்துக்கு ரூ.2 மானியம் வழங்காமல் நிறுத்திவிட்டன.தற்போதைய விலைவாசி உயர்வு, தீவன தட்டுப்பாடு, பல ஆண்டாக பால் விலையை முழுமையாக உயர்த்தாததால், இந்தாண்டு ஆவின் கொள்முதல் விலையான பசும்பால் ஒரு லிட்டர் ரூ.32 என்பதை ரூ.42 என்றும், எருமைப்பால் ரூ.41 என்பதை ரூ.51 என உயர்த்த வேண்டும். இக்கோரிக்கைகளை வலியுறுத்தி ஆகஸ்ட் 31ம் தேதி மாநில அளவில் ஆர்ப்பாட்டம் நடத்த தீர்மானம் நிறைவேற்றி உள்ளோம். இவ்வாறு பேசினார்.
செய்தி நிருபர் ஈரோடு டுடே
https://erode.today