ஈரோடு நவ 30:

ஈரோடு மாநகர் பகுதியில் கடந்த சில நாட்களாக இரவு நேரங்களில் மழை பெய்து வருகிறது. இதனால் பல்வேறு இடங்களில் சாலைகள் குண்டும் குழியுமாக காட்சியளிக்கிறது. குறிப்பாக கருங்கல்பாளையம் காவிரி ரோடு முழுவதும் திட்ட பணிகள் நடந்து வருவதால் மழை நீர் சேர்ந்து சேறும் சகதியுமாக காட்சி அளிக்கிறது. இதனால் வாகன ஓட்டிகள் அவதி அடைந்து வருகின்றனர். சில இடங்களில் வாகன ஓட்டிகள் நிலை தடுமாறி கீழே விழும் சூழ்நிலை உள்ளது.

ஈரோடு காந்திஜி சாலையானது முக்கிய போக்குவரத்து பகுதியாக விளங்கி வருகிறது. காந்திஜி சாலையில் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம், அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, மாநகராட்சி மகப்பேறு மருத்துவமனை, தலைமை தபால் நிலையம், பி.எஸ்.என்.எல், பொது மேலாளர் அலுவலகம், ஜவான் பவன், தீயணைப்பு நிலையம், ஏராளமான வணிக நிறுவனங்கள் கடைகள் உள்ளதால் இந்த சாலை எப்போதும் பரபரப்பாக காட்சி அளிக்கும்.

இந்நிலையில் தொடர் மழை காரணமாக கடந்த சில நாட்களுக்கு முன்பு எஸ்.பி. அலுவலகம் அருகே உள்ள சாலை திடீரென மண்ணுக்குள் இறங்கியது. இதையடுத்து நெடுஞ்சாலைத் துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து சாலையை சீரமைத்தனர். இந்நிலையில் நேற்று இரவு திடீரென எஸ்.பி. ஆபிஸ் அலுவலகம் அருகே இரண்டு இடங்களில் சாலையில் திடீர் பள்ளம் ஏற்பட்டது. உடனடியாக போக்குவரத்து போலீசார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பள்ளம் ஏற்பட்ட இடத்தில் தடுப்புகள் அமைத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இன்று காலையும் நெடுஞ்சாலைத்துறை பணியாளர்கள் பிரிந்து வந்து பள்ளம் ஏற்பட்ட பகுதியில் ஜல்லிகளை நிரப்பி பள்ளங்களை சீரமைத்து வருகின்றனர். இந்த சாலையில் கடந்த சில நாட்கள் முன்புதான் வளர்ச்சித் திட்டப் பணிகள் நடந்து முடிந்து அடைந்தது. இந்த சாலை வழியாகத்தான் வெளி ஊரிலிருந்து ஈரோடு பஸ் நிலையத்திற்கு வாகனங்கள் செல்கின்றன. அதைப்போல் பன்னீர்செல்வம் பார்க்கில் இருந்து காளை மாடு சிலை வழியாக போக்குவரத்து நடைபெற்று வந்தது.

எஸ்.பி. அலுவலகத்தில் இரண்டு இடங்களில் சாலையில் திடீர் பள்ளம் ஏற்பட்டதால் பன்னீர்செல்வம் பார்க்கில் இருந்து காளை மாடு வழியாக செல்லும் ஒரு வழி பாதை போக்குவரத்து நிறுத்தப்பட்டு அதற்கு மாற்று வழியாக ஸ்டேட் பாங்க் காலனி வழியாக காளைமாட்டு சிலைக்கு போக்குவரத்து திருப்பி விடப்பட்டது. தொடர்ந்து நெடுஞ்சாலைத் துறை பணியாளர்கள் சாலையை சீரமைத்து வருகின்றனர். https://www.tnpolice.gov.in

நிருபர் ஈரோடு டுடே
https://www.erode.today/