பெருந்துறை ஆக 21:
பெருந்துறை அருகே கீழ்பவானி வாய்க்கால் கரை உடைந்து தண்ணீர் விளைநிலங்கள் மற்றும் கிராமத்திற்குள் புகுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. கீழ்பவானி வாய்க்காலில் கான்கிரீட் கரைகள் அமைக்க பொதுப்பணித்துறையினர் நடவடிக்கை எடுத்தனர். கான்கிரீட் கரைகள் அமைக்கப்பட்டால் வாய்க்காலின் தன்மை மாறி நிலத்தடி நீர் செறிவூட்டப்படுவது பாதிக்கும் என்றும், கசிவு நீரை நம்பி உள்ள 50 ஆயிரம் ஏக்கர் விளைநிலங்கள் தரிசாக மாறிவிடும் என்று கூறி விவசாயிகளின் ஒரு பகுதியினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதையடுத்து வாய்க்காலில் பாதிப்பு அதிகம் உள்ள இடங்களில் மட்டும் கான்கிரீட் கரைகள் அமைப்பது என்றும் பிற பகுதிகளில் கரைகளை மண்ணால் பலப்படுத்தப்படுவது என்றும் முடிவெடுக்கப்பட்டது. இதன்படி கடந்த சில மாதங்களாக வாய்க்காலில் பணிகள் நடைபெற்று வந்தது. இந்நிலையில், கடந்த 15ம் தேதி பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்காலில் பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டது.
இந்த தண்ணீர் வெள்ளோடு தாண்டி சென்று கொண்டுள்ளது. வாய்க்காலின் பாதுகாப்பு தன்மையை கருத்தில் கொண்டு வினாடிக்கு 1000 கனஅடி மட்டும் திறக்கப்பட்டது. இந்நிலையில், வாய்க்காலில் புதியதாக கரை அமைக்கப்பட்ட இடங்களில் மண் இலகுவாக உள்ளதால் மண் அரிப்பு ஏற்பட்டு வந்தது. இதையடுத்து பாதிப்பு ஏற்படும் என்று கண்டறியப்பட்ட இடங்களில் பொதுப்பணித்துறையினர் சரி செய்து வந்தனர்.
இந்நிலையில், பெருந்துறை அடுத்துள்ள பெரியவிளாமலை ஊராட்சிக்குட்பட்ட கண்ணவேலம்பாளையம் கிராமம் அருகே வாய்க்காலின் இருகரைகளையும் தொட்டு தண்ணீர் சென்றது. கரை பலப்படுத்தப்பட்ட பகுதியில் பாதிப்பு ஏற்படாத வகையில் காங்கிரீட் சுவர் இருபுறமும் அமைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், மதகு அமைக்கப்பட உள்ள இடத்தில் தண்ணீர் அழுத்தம் காரணமாக நேற்று முன்தினம் இரவு லேசான கசிவு ஏற்பட்டதையடுத்து அதை கண்டுபிடித்த பொதுப்பணித்துறை ஊழிர்கள் உடனடியாக சரி செய்ததோடு தொடர்ந்து கண்காணித்து வந்தனர்.
இந்நிலையில் நேற்று காலை 10 மணியளவில் கசிவு ஏற்பட்ட பகுதியில் திடீர் உடைப்பு ஏற்பட்டு வாய்க்காலில் இருந்த தண்ணீர் விளைநிலங்கள் மற்றும் கிராமங்களுக்குள் புகுந்தது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நேற்று முன்தினம் இரவே தண்ணீர் நிறுத்தப்பட்டதால் தண்ணீரின் வேகம் குறைந்து காணப்பட்டதால் பெரும் பாதிப்பு தவிர்க்கப்பட்டது. இதையடுத்து உடைப்பு ஏற்பட்ட பகுதியில் மணல் மூட்டைகளை அடுக்கி கரைகளை பலப்படுத்தும் பணியில் பொதுப்பணித்துறையினர் ஈடுபட்டனர். உடைப்பு ஏற்பட்ட இடத்தை அமைச்சர் முத்துசாமி, கலெக்டர் கிருஷ்ணனுண்ணி, எஸ்.பி. சசிமோகன் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் பார்வையிட்டு ஆய்வு செய்ததோடு கரை பலவீனமாக உள்ள இடங்களை கண்டறிந்து சரி செய்யவும் பொதுப்பணித்துறையினருக்கு அமைச்சர் முத்துசாமி உத்தரவிட்டார்.
செய்தி நிருபர் ஈரோடு டுடே
https://erode.today