ஈரோடு 13 : பெருந்துறை பேரூராட்சியில் ரூ.1.28 கோடியில் பயோமைனிங் முறையில் இயற்கை உரம் தயாரிக்கும் பணி, பிளாஸ்டிக் கழிவுகளை பிரித்தெடுக்கும் பணிகளை ஈரோடு ஆட்சியர் கிருஷ்ணனுண்ணி ஆய்வு செய்தார்.

பின், பெருந்துறை பகுதியில் குடிநீர் வடிகால் வாரிய மேல்நிலை தொட்டி வளாகத்தில், ஈரோடு – திருப்பூர் மாவட்டங்களில் உள்ள 7 பேரூராட்சி, 547 வழியோர ஊரக குடியிருப்புகளுக்கான கொடிவேரி கூட்டு குடிநீர் திட்டப்பணியை பார்வையிட்டார்.

தற்போது ஊரக பகுதியில் தனி நபருக்கு தினமும் 25 முதல் 45 லிட்டர் நீரும், பேரூராட்சி பகுதியில் 60 லிட்டரும் வழங்கப்படுகிறது. இத்திட்டம் நிறைவேறும்போது ஊரக பகுதியில் 55 லிட்டரும், பேரூராட்சி பகுதியில் 90 லிட்டரும் நீர் வழங்கப்படும். மக்கள் தொகை அதிகரித்தாலும், தேவையின் அடிப்படையில் கூடுதல் நீர் வழங்கும் வகையில் திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது என அதிகாரிகள் விளக்கினர்.

பேரூராட்சியில் சேகரிக்கப்படும் குப்பையை, மக்கும் குப்பை, மக்காத குப்பை என பிரித்து, மக்கும் குப்பையில் இருந்து பயோமைனிங் மூலம் உரம் தயாரிக்கப்படுகிறது. இந்த உர தொழிற்சாலையை ஆய்வு செய்து, கழிவுகளை கையாளும் முறையை பார்த்தார்.

இந்த உரத்தை, விவசாய நிலங்களுக்கு இலவசமாக வழங்குவதை பாராட்டினார். குடிநீர் வடிகால் வாரிய செயற்பொறியாளர் மணிவண்ணன், பேரூராட்சிகள் உதவி இயக்குனர் கனகராஜ், உதவி செயற்பொறியாளர் சிவகுமார் உட்பட பலர் பங்கேற்றனர்.

செய்தி நிருபர் ஈரோடு டுடே
https://www:erode.today