ஈரோடு ஆக 3:

ஒன்றிய அரசு ஊதிய  மாற்றத்தை அமல்படுத்த வலியுறுத்தி ஈரோடு மாவட்டத்தில் எய்ட்ஸ் கட்டுபாட்டு திட்ட ஊழியர்கள் கருப்பு பேட்ஜ் மற்றும் கோரிக்கை அட்டையை அணிந்து பணியாற்றினர். ஈரோடு மாவட்டத்தில் தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டு திட்டத்தின் கீழ் பணியாற்றும் ஊழியர்கள் ஊதிய மாற்றத்தை ஒன்றிய அரசு உடனடியாக அமல்படுத்த வலியுறுத்தி கோரிக்கை அட்டை அணிந்தும், கருப்பு பேட்ஜ் அணிந்தும் பணியாற்றினர்.

இதேபோல், தொடர்ந்து இன்று (3ம் தேதி), நாளை (4ம் தேதி) வரை கோரிக்கைகளை வலியுறுத்தி ஒன்றிய அரசின்  கவனத்தை ஈர்க்கும் வகையில் பணியாற்றுவதாக தெரிவித்தனர். இதுகுறித்து தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அனைத்து ஊழியர்கள் நலச்சங்கத்தின் மாவட்ட தலைவர் ரமேஷ் கூறியதாவது: தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டு திட்டத்தின் கீழ் தமிழகம் முழுவதும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், மருத்துவ கல்லூரி மருத்துவமனைகள், மாவட்ட எய்ட்ஸ் கட்டுப்பாட்டு, தடுப்பு அலகு பிரிவுகளில் ஆலோசகர், ஆய்வக நுட்புனர், செவிலியர், மருந்தாளுநர், கணிணி மேலாளர், சமுதாய நல ஒருங்கிணைப்பாளர், மாவட்ட திட்ட மேலாளர், மேற்பார்வையாளர், ஆய்வக மேற்பார்வையாளர், கணக்காளர், ஒட்டுனர் மற்றும் உதவியாளர்கள் என பல்வேறு பணிநிலைகளில் ஒப்பந்த அடிப்படையில் 2ஆயிரத்து 500 பேர் பணியாற்றி வருகின்றனர்.

ஈரோடு மாவட்டத்தில் 70 பேர் பணிபுரிந்து வருகிறோம். இந்தியா முழுவதும் அனைத்து மாநிலங்களிலும் 25 ஆயிரம் பேர் பணிபுரிந்து வருகிறார்கள். தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டு திட்டத்தின் கீழ் பணிபுரியும் ஊழியர்களுக்கு தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டு நிறுவனம் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஊதிய மாற்றத்தை அறிவிக்கும். ஆனால், கடந்த 9 ஆண்டுகளாக தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டு நிறுவனம் ஊதிய மாற்றத்தை அறிவிக்கவில்லை. அதே நேரத்தில் கடந்த ஆண்டு தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டு திட்டத்தில் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் மருத்துவர்களுக்கு மட்டும் ஊதிய மாற்றத்தை அறிவித்துள்ளார்கள். மற்ற ஊழியர்களுக்கு இதுநாள் வரை ஊதிய மாற்றத்தை அறிவிக்கவில்லை. தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டு நிறுவனத்தின் இத்தகையான பாகுபாடன செயல்பாடுகள் கொரானா தொற்று பேரிடர் காலத்தில் முன்கள பணியாளர்களாக பணிபுரிந்து வரும் தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டு திட்டத்தின் ஊழியர்களுக்கு மிகுந்த அதிர்ச்சியையும், ஏமாற்றத்தையும் அளிக்கிறது. டெல்லியில் தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டு ஊழியர்கள் நலச்சங்கம் எடுத்துள்ள முடிவின்படி, தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டு திட்டத்தின் கீழ் பணிபுரியும் அனைத்து ஊழியர்களுக்கும் ஊதிய மாற்றத்தை அமல்படுத்திட தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டு நிறுவனத்தையும், ஒன்றிய அரசையும் வலியுறுத்தும் விதமாக எய்ட்ஸ் கட்டுப்பாட்டு திட்டத்தின் அனைத்து ஊழியர்களும் அவர்களது பணிபுரியும் இடங்களிலேயே கோரிக்கை அட்டை மற்றும் கருப்பு பேட்ஜ் அணிந்து பணியாற்றி வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

செய்தி நிருபர் ஈரோடு டுடே
https://erode.today