ஈரோடு ஆக 13:

ஈரோட்டில் சனி, ஞாயிற்று கிழமைகளில் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதிகளில் மினி லாக் டவுன் அமல்படுத்தப்பட்டுள்ளது. அனுமதியில்லாத பிற கடைகளை திறந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட நிர்வாகம் எச்சரித்துள்ளது. கொரோனா தொற்றின் 3வது அலையை கட்டுப்படுத்த ஈரோடு மாவட்டத்தில் பல்வேறு புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இதில், மாவட்டத்தில் உள்ள அனைத்து பூங்காக்கள், சுற்றுலா தலங்கள் மற்றும் அருங்காட்சியகங்கள் ஞாயிற்று கிழமைகளில் செயல்பட தடை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும், மாவட்டத்தில் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் கடைகள், நிறுவனங்கள், அலுவலகம் செயல்பட தடை விதித்துள்ளனர். இதன்படி ஈரோட்டில் ஈஸ்வரன் கோவில் வீதி, திருவேங்கடாசமி வீதி, காந்திஜி ரோடு, பிருந்தா வீதி, பழைய சென்ட்ரல் தியேட்டர் ரோடு, மணிக்கூண்டு, ஆர்.கே.வி. ரோடு, மேட்டூர் ரோடு, ஸ்டோனி பாலம், வ.உ.சி பூங்கா, காவிரி ரோடு, பவானியில் காவிரி ரோடு, கூடுதுறை, அம்மாபேட்டை டவுன், மங்களபடி துறை, கோபியில் மார்க்கெட், கடை வீதி பகுதிகளிலும், சத்தியமங்கலத்தில் வரதம்பாளையம், நிர்மலா தியேட்டர் ஜங்ஷன், புளியம்பட்டி மாதம்பாளையம் சந்திப்பு, புளியம்பட்டி பஸ் நிலையம் எதிரில், தாளவாடியில் பஸ்வேஸ்வரா பஸ் நிலையம், டி.என்.பாளையம் பஸ் நிறுத்தம், டி.ஜி.புதூர் ஆகிய பகுதிகளில் இயங்கும் பால், மருந்தகம், மளிகை கடை, காய்கறி கடைகள், உணவகங்கள் ஆகியவை தவிர பிற கடைகள் அனைத்தும் சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழுமையாக இயங்க தடை விதிக்கப்படுகிறது.

இந்த கட்டுப்பாடுகள் அனைத்தும் வரும் 23ம் தேதி வரை அமலில் இருக்கும் எனவும், இந்த கட்டுப்பாடுகளை மீறி வரும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் அனுமதிக்கப்பட்ட கடைகளை தவிர பிற கடைகளை திறந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஈரோடு கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தெரிவித்துள்ளார். இதேபோல், ஈரோடு மாநகரில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் பிற கடைகளை திறந்தால் உரிமையாளர்கள் மீது அபராதம் விதித்து நடவடிக்கை எடுப்பதோடு மட்டும் அல்லாமல் கடைகளை பூட்டி சீல் வைக்கப்படும் என மாநகராட்சி கமிஷனர் இளங்கோவன் தெரிவித்துள்ளார்.

செய்தி நிருபர் ஈரோடு டுடே
https://erode.today