ஈரோடு சூலை 23:

கொரோனா தொற்று பரவல் காரணமாக ஈரோட்டில் நடைபெற இருந்த புத்தக திருவிழா இந்தாண்டும் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக மக்கள் சிந்தனை பேரவையின் மாநில தலைவர் ஸ்டாலின் குணசேகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,கொரோனா பெருந்தொற்றின் வீரியம் இன்னும் தொடர்ந்து கொண்டுள்ளது. கல்வி நிறுவனங்கள் திறக்கப்படாமல் உள்ளது. சுமார் 600 பதிப்பக ஊழியர்களை ஒரே மண்டபத்திலும், விடுதியிலும் வழக்கமாக தங்க வைப்பது என்பது இன்றைய சூழலில் இயலாத நிலை. புத்தக திருவிழாவிற்கு கூட்டம் கூட்டமாக மக்களை வரவழைப்பது என்பது கொரோனா பரவலுக்கு வழிவகுக்கும்.கொரோனாவை முற்றாக முறியடிக்க அரசுக்கும், அதிகாரிகளுக்கும் மருத்துவர்களுக்கும் முழுமையாக ஒத்துழைக்க வேண்டியது மக்கள் சிந்தனை பேரவை போன்ற சமூக நலன் சார்ந்த அமைப்புக்களின் முழு முதற் கடமையாகும். எனவே இந்த ஆண்டின் ஈரோடு புத்தக திருவிழாவை ரத்து செய்வதென பேரவையின் செயற்குழு தீர்மானித்துள்ளது. வருகிற 30ம் தேதி முதல் ஆகஸ்ட் 10ம் தேதி வரை திருவிழாவில் நடைபெற வேண்டிய மாலை நேர சொற்பொழிவு நிகழ்ச்சிகள் மட்டும் இணைய வழியாக நடைபெற உள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

செய்தி நிருபர் ஈரோடு டுடே
https://www:erode.today