மொடக்குறிச்சி செப் 7:
வேளாண்மைத்துறை நடமாடும் மண் பரிசோதனை நிலையத்தின் சார்பில் மொடக்குறிச்சி அருகே காகம் கிராமத்தில் மண் பரிசோதனை விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. ரத்தினகிரி இயற்கை விவசாயிகள் கூட்டமைப்பின் தலைவர் பூபதிசுந்தரம் முகாமை தொடங்கி வைத்தார். முகாமில் நடமாடும் மண்பரிசோதனை நிலைய வேளாண்மை அதிகாரி ரேவதி கலந்து கொண்டு மண் மற்றும் பாசன நீர் ஆய்வின் முக்கியத்துவம் குறித்தும், மண்ணில் சுண்ணாம்பு தன்மையை கண்டறிவது குறித்தும் விளக்கி பேசினார். அப்போது அவர் கூறுகையில், “மண்ணில் சுண்ணாம்பு தன்மை அதிகமாக இருந்தால் யூரியா, சூப்பர் பாஸ்பேட் உரங்களுக்கு பதிலாக அம்மோனியம் சல்பேட் , டி.ஏ.பி. உரங்களை இடலாம். எலுமிச்சை மற்றும் மா பயிரிடுவதை தவிர்க்கவும். அதிக அளவில் பசுந்தாள் உரங்கள் மற்றும் இயற்கை உரங்களை இடலாம். மண் பரிசோதனை அடிப்படையில் எந்த வகை உரத்தை இடுவது என்று தெரிந்து உரமிடுவதால் உரச்செலவு குறைவதோடு மண்ணின் வளம் பாதுகாக்கப்படுகிறது. இதனால் அதிக மகசூல் பெற முடியும். மண்மாதிரி ஆய்விற்கு பேரூட்டச்சத்துக்களுக்கு ரூ.10, நுண்ணூட்ட சத்துக்களுக்கு ரூ.10, பாசன நீர் மாதிரி ஆய்வுக்கு ரூ.20 கட்டணம் வசூலிக்கப்படுகிறது”, என்றார். தொடர்ந்து சுமார் 20 விவசாயிகளின் நிலத்தில் இருந்து மண் மற்றும் பாசன நீர் மாதிரிகள் பரிசோதனைக்காக எடுக்கப்பட்டன. முகாமில் உதவி தோட்டக்கலை அதிகாரி சுப்பிரமணி மற்றும் விவசாயிகள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
நிருபர் ஈரோடு டுடே
https://www.erode.today/