ஈரோடு ஆக 4: வேளாண்மைக்கு தனி பட்ஜெட் என்ற தமிழக அரசின் அறிவிப்பு பாராட்டுக்குறியது என்று பா.ம.க., தலைவர் ஜி.கே.மணி தெரிவித்துள்ளார். சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலை நினைவுநாளையொட்டி பா.ம.க., சார்பில் கட்சியின் தலைவர் ஜி.கே.மணி நேற்று தீரன்சிலையின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது, இந்த மண்ணிற்காக போரிட்ட தீரன் சின்னமலையின் வாழ்க்கை வரலாற்றினை இளைய சமுதாயத்தினர் தெரிந்து கொள்ளும் வகையில், பாடப்புத்தகத்தில் சேர்க்க வேண்டும் என்று நீண்ட காலமாக வலியுறுத்தி வருகின்றோம். மணி மண்டபம் கட்ட வேண்டும் என்று முதலில் குரல் கொடுத்தது பாமக தான். தமிழகத்தில் தொகுப்பு இட ஒதுக்கீடு முறையை அமல்படுத்த வேண்டும். தி.மு.க., அறிவித்த தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தும் படிப்படியாக நிறைவேற்றுவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது.

கடந்த 14 ஆண்டுகளாக பா.ம.க., சார்பில் நிழல் நிதி நிலை அறிக்கை தாக்கல் செய்து வருகின்றோம். இந்நிலையில், வேளாண்மைக்கு என்று தனி நிதி நிலை அறிக்கை தாக்கல் செய்யப்படும் என்ற தமிழக அரசின் அறிவிப்பு வரவேற்க கூடியது மட்டுமல்லாது மகிழ்ச்சியளிக்க கூடியதாக உள்ளது. இதற்காக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம். வேளாண் விளைபொருட்களுக்கு கட்டிபடியான விலை கிடைக்க எம்.எஸ்.சுவாமிநாதன் குழு பரிந்துரையை அமல்படுத்த வேண்டும். ஆணைமலை நல்லாறு திட்டத்தை அமல்படுத்த வேண்டும். மேகதாதுவில் கர்நாடக அரசு அணை கட்டக்கூடாது. டெல்லியில் போராடும் விவசாயிகளிடம் மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண வேண்டும். இவ்வாறு ஜி.கே.மணி கூறினார்.

செய்தி நிருபர் ஈரோடு டுடே
https://erode.today