ஈரோடு சூலை 29:
ஈரோடு மாவட்டத்தில் கற்போம் எழுதுவோம் இயக்க திட்டத்தில் படித்து வந்த முதியோர்களுக்கு இன்று (வியாழக்கிழமை) முதல் தேர்வு நடக்கிறது. மத்திய அரசு மற்றும் மாநில அரசுகள் சார்பில் வயது வந்தோர் கல்வித்திட்டமாக கற்போம் எழுதுவோம் இயக்கம் என்ற திட்டம் செயல்படுத்தப்படுகிறது. தமிழக பள்ளிக்கல்வித்துறை மூலம் தமிழ்நாட்டில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஈரோடு மாவட்டத்தில் 18 வயதுக்கு மேற்பட்ட எழுத்தறிவு இல்லாதவர்களுக்கு கல்வி போதிக்கும் திட்டமாக இது செயல்படுத்தப்படுகிறது. இங்கு முதியோர்கள் அதிக அளவில் இந்த திட்டத்தில் சேர்ந்து உள்ளனர். ஒரு மையத்துக்கு 20 பேர் என்ற வீதத்தில் 1,000-க்கும் மேற்பட்டவர்கள் இந்த வகுப்புகளில் கலந்து கொண்டனர். அவர்களுக்கு அடிப்படை எழுத்தறிவு, கணிதம் ஆகியவை தன்னார்வலர்கள் மூலம் கற்பிக்கப்பட்டது. தன்னார்வலர்கள் எந்த அடிப்படை ஊதியமும் இன்றி பணியாற்றி வருகிறார்கள். அவர்களுக்கு கற்போம் எழுதுவோம் இயக்க மையங்கள் செயல்படும் அரசு பள்ளிக்கூட தலைமை ஆசிரியர்கள், ஆசிரிய-, ஆசிரியைகள் உதவிகள் செய்து வருகிறார்கள். ஏற்கனவே கற்போம் எழுதுவோம் இயக்கம் மூலம் படித்த முதியோருக்கு தேர்வுகள் அறிவிக்கப்பட்டது. தேர்தல் மற்றும் கொரோனா காரணமாக தள்ளி வைக்கப்பட்டது. இந்த நிலையில் இன்று (வியாழக்கிழமை) முதல் 31ம் தேதி (சனிக்கிழமை) வரை தேர்வுகள் நடத்தப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் அறிவித்து உள்ளனர். இதற்காக அனைத்து தேர்வு மையங்களுக்கும் வினாத்தாள்கள் வழங்கப்பட்டு உள்ளன. 3 நாட்களும் காலை, மதியம் என தேர்வு நடக்கிறது. காலையில் 4 பேர், மதியம் 3 பேர் என்ற வீதம் தேர்வுகள் நடத்த அதிகாரிகள் உத்தரவிட்டு உள்ளனர். அதன்படி இன்று (வியாழக்கிழமை) காலை முதியோர்களுக்கான தேர்வுகள் தொடங்குகின்றன. இந்த தேர்வை கண்காணிக்க மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி முருகன் தலைமையில் வட்டாரம் வாரியாக தனிப்படைகள் அமைக்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.
செய்தி நிருபர் ஈரோடு டுடே
https://erode.today