ஈரோடு அக் 29:
தமிழகத்தில் கொரோனா தாக்கம் காரணமாக பள்ளி , கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. மாணவ-, மாணவிகளின் கல்வித் திறன் பாதிக்காத வகையில் ஆன்லைன் வகுப்புகள் நடைபெற்று வந்தன. இந்நிலையில் கொரோனா தாக்கம் குறைய தொடங்கியதை அடுத்து படிப்படியாக தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. அதன்படி கடந்த செப்டம்பர் மாதம் 1-ம் தேதி முதல் 9-ம் வகுப்பு முதல் பிளஸ்- 2 வரை படிக்கும் மாணவ- மாணவிகளுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகின்றன.
சுழற்சி முறையில் மாணவ மாணவிகள் பங்கேற்று வருகின்றனர். கொரோனா பாதுகாப்பு வழிகாட்டி நெறிமுறைகளை கடைப்பிடித்து வகுப்புகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நவம்பர் 1-ம் தேதி முதல் 1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடைபெறும் என அரசு அறிவித்தது.
இதையடுத்து தமிழக முழுவதும் பள்ளி திறப்பை முன்னிட்டு வகுப்புகள் தூய்மைப்படுத்தும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. ஈரோடு மாவட்டத்தில் 1,287 அரசு தொடக்க நிலை, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல் நிலை பள்ளிகளில் 1-ம் முன்பு முதல் 8-ம் வகுப்பு வரை உள்ளது. 1 லட்சத்து 6 ஆயிரத்து 520 மாணவ -மாணவிகள் பயின்று வருகின்றனர்.
இதையடுத்து பள்ளிகளில் தூய்மைப்படுத்தும் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. கிருமிநாசினி தெளிக்கும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். மாணவ, -மாணவிகள் கடைப்பிடிக்க வேண்டிய வழிகாட்டி நெறிமுறைகள் குறித்து தொடக்கக்கல்வி இயக்குனர் அனைத்துப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் ஒரு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.
அதில் கூறியிருப்பதாவது: புதர்கள் மற்றும் குப்பைகள் இன்றி தூய்மையாக இருக்கும் வகையில் பள்ளி வளாகம் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். பள்ளியில் உள்ள அனைத்து வகுப்பறைகள், தலைமையாசிரியர் அறை, சமையல் அறை மற்றும் கழிப்பறைகள் நன்கு தூய்மை படுத்தப்பட்டு இருப்பதை உறுதி செய்யவேண்டும். பள்ளிகளில் அனைத்து இடங்களிலும் கிருமிநாசினி சுத்தம் செய்யப்பட்டு இருப்பதை உறுதி செய்யவேண்டும். மாணவர்கள் பயன்பாட்டிற்கான குடிநீர் தொட்டியில் உட்புறம் கிருமிநாசினி கொண்டு நன்கு சுத்தம் செய்யப்பட்டு இருக்கவேண்டும்.
போதுமான அளவில் முகக்கவசம் கையிருப்பு வைத்திருக்கவேண்டும். பள்ளியின் நுழைவு வாயிலும் மாணவர்களுக்கு உடல் வெப்ப பரிசோதனை செய்வதற்கான வசதி செய்யவேண்டும். வகுப்பறையில் சமூக இடைவெளியுடன் மாணவர்கள் அமரும் வகையில் இட வசதி செய்து கொடுக்கவேண்டும். சுழற்சி முறையில் வகுப்புகள் நடத்தவேண்டும்.
மாணவர்களுக்கு பாடம் எடுக்கும் ஆசிரியர்கள், பணியாளர்கள் கட்டாயம் தடுப்பூசி செலுத்தி இருக்கவேண்டும், கொசு உற்பத்தியாகாத வண்ணம் பள்ளிகளில் தடுப்பு நடவடிக்கை எடுக்கவேண்டும். பழுதடைந்த கட்டிடங்கள் இருப்பின் மாணவர்கள் அங்கு செல்லாத வகையில் நடவடிக்கை எடுக்கவேண்டும் உள்பட பல்வேறு வழிகாட்டி நெறிமுறைகள் பின்பற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளன. https://www.tnschools.gov.in
நிருபர் ஈரோடு டுடே
https://www.erode.today/