ஈரோடு நவ 1 :

தமிழகத்தில் கொரோனா தாக்கம் காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. மாணவ,- மாணவிகளின் கல்வித் திறன் பாதிக்காத வகையில் ஆன்லைன் வகுப்புகள் நடைபெற்றுவந்தன. இந்நிலையில் கொரோனா தாக்கம் குறைய தொடங்கியதை அடுத்து படிப்படியாக தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. அதன்படி கடந்த செப்டம்பர் மாதம் 1-ம் தேதி முதல் 9-ம் வகுப்பு முதல் பிளஸ்- 2 வரை படிக்கும் மாணவ,- மாணவிகளுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. சுழற்சி முறையில் மாணவ, மாணவிகள் பங்கேற்று வருகின்றனர்.

கொரோனா பாதுகாப்பு வழிகாட்டி நெறிமுறைகளை கடைப்பிடித்து வகுப்புகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நாளை (திங்கட்கிழமை) முதல் 1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, -மாணவிகளுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடைபெறும் என அரசு அறிவித்தது.ஈரோடு மாவட்டத்தில் 1,287 அரசு தொடக்க நிலை, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல் நிலை பள்ளிகளில் 1-ம் முன்பு முதல் 8-ம் வகுப்பு வரை 1 லட்சத்து 6 ஆயிரத்து 520 மாணவ, -மாணவிகள் பயின்று வருகின்றனர். இதையடுத்து பள்ளிகளில் தூய்மைப்படுத்தும் பணிகள் கடந்த சில நாட்களாக விறுவிறுப்பாக நடந்து வந்தது. கிருமி நாசினி தெளிக்கும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். பள்ளிகள் கடைபிடிக்க வேண்டிய பாதுகாப்பு வழிகாட்டு நெறிமுறைகள் குறித்து தொடக்கக்கல்வி இயக்குனர் அனைத்துப் பள்ளி தலைமை ஆசிரியர் களுக்கும் ஒரு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.

மேலும் மாணவர்களுக்கு சுழற்சி முறையில் வகுப்புகள் நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. எக்காரணம் கொண்டும் மாணவ, -மாணவிகள் பள்ளிக்கு வர கட்டாயப்படுத்த மாட்டார்கள். பெற்றோர்கள் விருப்பத்தின் பேரில் அவர்கள் பள்ளிக்கு வரலாம். மேலும் பெற்றோரையும் அழைத்து வரலாம் என்று அறிவுறுத்தப்பட்டிருந்தது. மாணவ, மாணவிகள் கட்டாயம் முக கவசம் அணிந்து வர வேண்டும். அவர்களின் உடல் வெப்ப பரிசோதனை தெரிந்து கொள்ளும் வகையில் தெர்மல் ஸ்கேனர் மூலம் பரிசோதனை செய்யப்படும்.

மாணவ, மாணவிகளுக்கு பாடம் எடுக்கும் ஆசிரியர்கள், பணியாளர்கள் கண்டிப்பாக கொரோனா தடுப்பூசி போட்டு இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. கழிப்பறைகள், பள்ளி வளாகங்கள் தூய்மைப்படுத்தும் பணி நடந்து வருகிறது. பள்ளிகளில் மாணவர்கள் கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகள் குறித்து நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது. நாளைகள் பள்ளிகள் திறந்தாலும் சில நாட்களுக்கு மாணவர்களுக்கு புத்தாக்க பயிற்சி அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.ஓவியம் வரைதல், கதை சொல்லுதல், போன்ற மன மகிழ்ச்சி செயல்பாடுகள் குறித்து பயிற்சி அளிக்கப்படுகிறது. https://www.tnhealth.tn.gov.in , https://www.tnschool.gov.in  

நிருபர் ஈரோடு டுடே
https://www.erode.today/