ஈரோடு டிச 2:

ஈரோட்டில் 1,257 அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு ரூ.36 லட்சம் மதிப்பீட்டில் உதவித்தொகைகளை அமைச்சர் முத்துசாமி வழங்கினார். தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறையின் சார்பில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நேற்று ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. விழாவிற்கு கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தலைமை தாங்கினார். எம்.எல்.ஏ.க்கள் வெங்கடாசலம், திருமகன் ஈவெரா, தமிழ்நாடு அரசு கேபிள் டிவி தலைவர் குறிஞ்சி சிவகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

வீட்டு வசதித்துறை அமைச்சர் முத்துசாமி கலந்து கொண்டு ஈரோடு மாவட்டத்தில் பதிவு பெற்ற 1,257 அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு ரூ.36 லட்சம் மதிப்பீட்டில் கல்வி, இயற்கை மரணம், ஓய்வூதியம் உள்ளிட்ட உதவித்தொகைகளை வழங்கி பேசியதாவது, உடலுழைப்பு தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் பொருட்டு, முன்னாள் முதல்வர் கலைஞரால் தமிழ்நாடு உடலுழைப்பு தொழிலாளர்கள் சமூக பாதுகாப்பு நலவாரியம் உருவாக்கப்பட்டு மொத்தம் 18 வகையான தொழிலாளர்கள் நலவாரியங்கள் செயல்பட்டு வருகிறது.

ஈரோடு மாவட்டத்தில் 18 வகையான தொழிலாளர்கள் நலவாரியங்களில் இதுவரை 88,441 தொழிலாளர்கள் பதிவு செய்துள்ளனர். தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் ஆட்சி பொறுப்பேற்ற 50 நாட்களில் தமிழ்நாட்டில் உள்ள 50 ஆயிரம் அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு ரூ.10.69 கோடி மதிப்பீட்டில் பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கினார்கள்.அதன் தொடர்ச்சியாக 50 ஆயிரத்து 721 அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு ரூ.12.35 கோடி மதிப்பீட்டில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கியுள்ளார்கள்.

அந்த வகையில் ஈரோடு மாவட்டத்தில் 1257 அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு ரூ.36 லட்சம் மதிப்பீட்டில் கல்வி, இயற்கை மரணம், ஓய்வூதியம் உள்ளிட்ட உதவித்தொகைகள் வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு பேசினார். நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் முருகேசன், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் நவமணி, தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர்கள் நலவாரிய தலைவருக்கான தனிச்செயலர் அழகேசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். https://www.tnuwwb.tn.gov.in

நிருபர் ஈரோடு டுடே
https://www.erode.today/