ஈரோடு ஆக 20:

ஈரோடு மாவட்டம் பர்கூர் காவல் நிலையத்துக்கு உட்பட்ட கத்திரி மலைக்கிராமத்தில்  போலீஸ் மற்றும் பொதுமக்கள் நல்லுறவை மேம்படுத்தும் விதமாக மலை கிராமத்தில் கொரோனா விழிப்புணர்வு முகாம், இலவச சூரிய ஒளி மின் விளக்குகள் அமைத்துக் கொடுத்தல் மற்றும் மாணவர்களுக்கு புத்தகங்கள் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நிகழ்ச்சி நடந்தது. ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் தலைமை தாங்கினார்.

பவானி போலீஸ் துணைக் கண்காணிப்பாளர் கார்த்திகேயன்,அந்தியூர் இன்ஸ்பெக்டர் செந்தில் மற்றும் பல தன்னார்வலர்கள் கலந்து கொண்டனர். வனத்துறை ஊழியர்கள் கத்திரி மலைக்கிராம மக்கள்  உள்பட பலர் கலந்து கொண்டனர். பின்னர் எஸ்.பி., சசிமோகன் மலைவாழ் மக்களுக்கு கொரோனா பாதுகாப்பு மற்றும் தடுப்பு ஊசி போடுதல்  குறித்து விளக்கி பேசினார். கத்திரிமலை பகுதியில் புதிதாக அமைத்துக் கொடுக்கப்பட்ட 16 சூரிய ஒளி மின் விளக்குகளை தொடங்கி வைத்தார்.

பின்னர் மலைக்கிராமத்தில் உள்ள பள்ளிக்கு சென்ற எஸ்.பி., சசிமோகன் அங்குள்ள மாணவர்களுடன் சிறிது நேரம் கலந்துரையாடினார். அப்போது கல்வி முக்கியத்துவம் குறித்து மாணவர்களிடம் விளக்கமாக எடுத்துக் கூறினார்.  சிறு வயதில் இருந்தே ஒரு லட்சியத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். அந்த லட்சியத்தை நோக்கிய உங்களது பயணம் இருக்க வேண்டும், என்று அறிவுரை கூறினார்.

செய்தி நிருபர் ஈரோடு டுடே
https://erode.today