சத்யமங்கலம் டிச 11:

ஈரோடு மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாகவும் விவசாயிகளின் விளை நிலங்களின் வாழ்வாதாரமாகவும் உள்ளது பவானிசாகர் அணை பவானிசாகர் அணையின் மூலம் ஈரோடு, கரூர், திருப்பூர் மாவட்டங்களின் 2 லட்சத்து 47 ஆயிரம் ஏக்கர் பாசன வசதி பெறுகின்றன. 105 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணையின் முக்கிய நீர்பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப் பகுதி உள்ளது.

ஏற்கனவே இந்த ஆண்டு தொடக்கத்தில் பெய்த கனமழை காரணமாக பவானிசாகர் அணை 100 அடியை எட்டி இருந்தது. இந்நிலையில் வடகிழக்கு பருவமழை பரவலாக பெய்து வந்ததன் காரணமாக நீலகிரி, கோவை உட்பட பகுதியில் கனமழை பெய்தது. இதன் காரணமாக பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரிக்கத் தொடங்கியது. இதனால் இந்த ஆண்டின் இரண்டாவது முறையாக பவானிசாகர் அணை 100 அடியை தாண்டியது.

தொடர்ந்து நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்து வந்ததால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து நீர்மட்டமும் உயர்ந்து வந்தது. கடந்த நவம்பர் மாதம் பவானிசாகர் அணையில் 104 அடியை எட்டியது. அதிலிருந்து தொடர்ந்து 104 அடியில் நீடித்து வந்தது. இந்நிலையில் கடந்த 10 நாட்களாக நீர்ப்பிடிப்பு பகுதியில் மீண்டும் மழை பெய்ததால் அணைக்கு நீர்வரத்து அதிகரிக்கத் தொடங்கியது. இதனால் பவானிசாகர் அணையின் 105 அடியை நெருங்கி உள்ளது.

இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணை 104.85 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 2421 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்கால் பாசனத்திற்காக 1800 கன அடியும், தடப்பள்ளி அரக்கன்கோட்டை பாசனத்திற்காக 500 கன அடியும், பவானி ஆற்றுக்கு குடிநீருக்காக 100 கன அடியும் என மொத்தம் 2 ஆயிரத்து 400 கனஅடி வீதம் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

அணையின் பாதுகாப்பை கருதி 105 அடியை எட்டியதும் அணைக்கு வரும் உபரி நீர் அப்படியே பவானி ஆற்றுக்கு திருப்பி விடப்படும். தற்போது அணை 104.85 அடியை எட்டி உள்ளதால் பொதுப்பணித் துறை, வருவாய் துறை, பவானிசாகர் பேரூராட்சி சார்பில் தண்டோரா மூலம் பவானி ஆற்றங்கரை மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதன்படி பவானிசாகர் ஆற்றங்கரையோரம், சத்தியமங்கலம், அக்ரஹாரம், தொட்டம்பாளையம், பாத்திமா நகர், அரியப்பம்பாளையம், சதுமுகை போன்ற பகுதியில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் பவானி ஆற்றங்கரையோரம் மக்கள் துணி துவைக்கவோ, குளிக்கவோ, மீன் பிடிக்கவோ, கால்நடைகளை ஆற்றங்கரைப் பகுதி கொண்டு செல்லவோ செல்லக்கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கடந்த இரண்டு நாட்களாக நீர் பிடிப்பு பகுதியில் மழைப்பொழிவு இல்லாததால் தண்ணீர் வரத்து மிதமான அளவே வந்து கொண்டிருக்கிறது. நாளைக்குள் பவானிசாகர் அணை முழு கொள்ளளவை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் தொடர்ந்து வருவாய்துறை பொதுப்பணித் துறையினர் நிலைமையை தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். https://www.wrd.tn.gov.in

நிருபர் ஈரோடு டுடே
https://www.erode.today