ஈரோடு டிச 20:

ஈரோடு மாநகராட்சி சார்பில் சொத்து வரி, வீட்டு வரி, வணிக நிறுவனங்களுக்கு போடும் வரி, குடிநீர் வரி, குத்தகை வரி ஆகியவை வசூல் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளாகவே வரி வசூல் முறையாக நடைபெறாமல் கோடிக்கணக்கில் பணம் நிலுவையில் இருந்தது.

மாநகரில் கடந்த 7 ஆண்டுகளில் மட்டும் பல்வேறு இனங்களில் ரூ.69 கோடியே 47 லட்சம் ரூபாய் நிலுவையில் இருந்தது. இந்நிலையில் சமீபத்தில் புதிதாக மாநகராட்சி ஆணையராக பொறுப்பேற்ற சிவக்குமார், நிலுவை வரிகளை உடனடியாக வசூலிக்க வேண்டுமென மண்டல அதிகாரிகளை முடுக்கி விட்டார்.

இதையடுத்து  ஈரோடு மாநகரில் உள்ள 4 மண்டலங்களிலும் உள்ள உதவி ஆணையாளர்கள் தலைமையில் அதிகாரிகள் வீடு வீடாகச் சென்று சொத்து வரி, வீட்டு வரி, குடி நீர் வரி வசூலித்து வந்தனர். வரி செலுத்தாதவர்கள் வீடுகளில் குடிநீர் இணைப்பும் துண்டிக்கப்பட்டு வந்தது. முறையாக வரி செலுத்தாத வணிக நிறுவனங்களுக்கு அபராதமும் விதிக்கப்பட்டு வந்தது.

இதுகுறித்து ஈரோடு மாநகராட்சி ஆணையாளர் சிவக்குமார் கூறும்போது,ஈரோடு மாநகர் பகுதியில் கடந்த சில நாட்களாகவே நிலுவையில் வைக்கப்பட்டிருந்த வரிகள் வசூலிக்கப்பட்டு வருகிறது. கடந்த 10 நாட்களில் மட்டும் ரூ.5 கோடியே 50 லட்சம் ரூபாய் வசூலாகியுள்ளது. எனவே இதுவரை வரி செலுத்தாதவர்கள் உடனடியாக வரியும் செலுத்த வேண்டும். இல்லாவிட்டால் அவர்களின் வீடுகளில் குடிநீர் இணைப்பு துண்டிக்கப்படும். இதைப்போல் வரி வசூல் செய்யும் அதிகாரிகளுக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு தரவேண்டும் என்றார். https://www.tnurbantree.tn.gov.in

நிருபர் ஈரோடு டுடே
https://www.erode.today