ஈரோடு டிச 23:
ஈரோடு மாவட்டத்தில் புதிய வேளாண் காடு வளர்க்கும் திட்டத்தில் ரூ.46.77 லட்சம் மதிப்பில் மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்ச்சியினை அமைச்சர் சு.முத்துசாமி துவக்கி வைத்தார்.
தமிழகத்தில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் மூலம் ‘தமிழ்நாடு விவசாய நிலங்களில் நீடித்த பசுமை போர்வைக்கான இயக்கம்’ என்ற புதிய வேளாண் காடு வளர்ப்பு திட்டத்தில் நடப்பாண்டு முதல் அனைத்து மாவட்டங்களிலும் ரூ.11.14 கோடி மதிப்பீட்டில் மரக்கன்றுகள் வழங்க அரசு உத்தரவிட்டது.
இதன்படி, ஈரோடு மாவட்டத்தில் ரூ.46.77 லட்சம் மதிப்பில் தேக்கு, மகோகனி, வேம்பு, மலைவேம்பு, நாவல், புளியன், பெருநெல்லி, செம்மரம் உள்ளிட்ட 3 லட்சத்து 11 ஆயிரத்து 800 மரக்கன்றுகள் வழங்கப்பட உள்ளது. இதில், வரப்பு நடவு முறை எனில் ஏக்கருக்கு 50 மரக்கன்றுகளுக்கு மிகாமலும், விவசாய நிலங்களில் நடவு செய்ய ஏக்கருக்கு 160 மரக்கன்றுகளும் வழங்கப்படுகிறது.
இதற்காக அரசு வனத்துறையின் கீழ் உள்ள அரசு நாற்றங்கால்களில் உற்பத்தி செய்து மாவட்டத்தில் உள்ள 14 ஒன்றியங்களிலும் உள்ள விவசாயிகளுக்கு மரக்கன்றுகள் இலவசமாக வழங்கப்பட உள்ளது. இதற்கான துவக்க விழா ஈரோடு வைராபாளையத்தில் நடந்தது.
இதில், அமைச்சர் சு.முத்துசாமி கலந்து கொண்டு விவசாயிகளுக்கு மரக்கன்றுகளை வழங்கினார். மேலும், மரக்கன்றுகளை பராமரிக்க மூன்று ஆண்டுகளுக்கு ஊக்க தொகையும் வழங்கப்பட்டது. மேலும், இந்த மரக்கன்றுகளை பெற்று அதனை முறையாக பராமரிக்க வேண்டும் என அமைச்சர் சு.முத்துசாமி பொதுமக்களுக்கும், விவசாயிகளிடமும் வேண்டுகோள் விடுத்தார். https://www.forests.tn.gov.in
நிருபர் ஈரோடு டுடே
https://www.erode.today